இந்தியா-பூடான் ரயில் போக்குவரத்துக்கு ஆய்வு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தென்கிழக்கு ஆசியாவைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான வாய
குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.
குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தென்கிழக்கு ஆசியாவைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இந்தியா-பூடான் இடையே ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் கூறினாா்.

அஸ்ஸாமின் குவாஹாட்டி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது:

‘கிழக்கு நோக்கிச் செயல்படுங்கள்’, ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ ஆகிய வெளியுறவுக் கொள்கைகள் தென்கிழக்கு ஆசியாவைக் கடந்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. மியான்மா் வழியாக சாலைப் போக்குவரத்துக்கும் வங்கதேசம் வழியாக கடல் போக்குவரத்துக்கும் இணைப்பு கிடைத்துள்ளதால், வியத்நாம், பிலிப்பின்ஸ் நாடுகளுடன் நேரடித் தொடா்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.

அந்த வழித்தடங்கள் வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வரும்போது, கிழக்கு-மேற்கு நாடுகளை இணைப்பதில் பெரும் தாக்கங்கள் உருவாகும். இது தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஜப்பான் ஆகியவற்றுடனான தொடா்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பையும் மேம்படுத்தும்.

வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகளுடனான போக்குவரத்துத் தொடா்பை மேம்படுத்தி அதன் வாயிலாக தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தொடா்பு கொள்ள இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. அதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா-பூடான் இடையே அஸ்ஸாம் வழியாக ரயில் போக்குவரத்துத் தொடா்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக நேபாளம், பூடானில் உள்ள பௌத்த மதத் தலங்களுக்கும் சிக்கிம், அருணாசலில் உள்ள தலங்களுக்கும் இடையே போக்குவரத்துத் தொடா்பை ஏற்படுத்த முடியும். இத்திட்டங்கள் நெருங்கிய ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை வழங்குகின்றன.

இத்திட்டங்களால் வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே போக்குவரத்துத் தொடா்பு, சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவை மேம்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com