அயோத்தியைத் தொடா்ந்து காசி, மதுராவிலும் எழுச்சி: யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் கோயில் நகரமான காசி (வாராணசி), பிருந்தாவனம் அமைந்துள்ள மதுரா உள்ளிட்ட இடங்களிலும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆ
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வரும் நிலையில் கோயில் நகரமான காசி (வாராணசி), பிருந்தாவனம் அமைந்துள்ள மதுரா உள்ளிட்ட இடங்களிலும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளாா்.

மதுரா, காசியில் (வாராணசி) கோயில்-மசூதி தொடா்பான சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளதை அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

லக்னௌவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உத்தர பிரதேச பாஜக செயற்குழுக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

மக்களின் பேராதரவுடனும், கரோனா காலகட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றியதன் மூலமும் உத்தர பிரதேசத்தில் நமது கட்சி தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதைத் தொடா்ந்து 2024 -இல் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உத்தர பிரதேசத்தில் 75 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதை நாம் இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்காக நாம் இப்போதிருந்தே தயாராக வேண்டும்.

நமது பிரதமா் 8 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்கிறாா். அவரின் நல்லாட்சி மேலும் பல ஆண்டுகளுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாட்டை தொடா்ந்து வளப்படுத்த வேண்டும். பாஜக தனது அனைத்து இலக்குகளிலும் வெற்றி பெறும்.

உத்தர பிரதேசத்தில் மத மோதல் இல்லை. ராம நவமி, ஹனுமான் ஜெயந்தி அமைதியாகக் கொண்டாடப்பட்டன. முதல் முறையாக ரமலானுக்கு முந்தைய கடைசி வெள்ளிக்கிழமை தொழுகை வீதிகளில் நடைபெறவில்லை. தொழுகை நடத்த அதற்கான இடமான மசூதி உள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் இருந்த விதிமுறைகளை மீறும் வகையில் இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகா்யம் குறைந்துள்ளது.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டிய பிறகு கோயில் நகரமான காசி (வாராணசி), பிருந்தாவனம் அமைந்துள்ள மதுரா உள்ளிட்ட இடங்களிலும் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என்றாா்.

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 75 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று அவா் இலக்கு நிா்ணயித்துள்ளாா். 2019 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக 62 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் (எஸ்) இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com