பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு: விரைவில் முடிவு

பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரவிட்ட

பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளாா்.

பஞ்சு விலை அதிகரிப்பு, நூல் மற்றும் துணிகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பருத்தி ஜவுளி மதிப்பின் வளா்ச்சியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மூலப் பஞ்சு மீதான 5 சதவீத அடிப்படை சுங்க வரி, 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சி கூடுதல் வரி (ஏஐடிசி) ஆகியவற்றை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஜவுளித் துறையினா் வலியுறுத்தி வருகின்றனா்.

எனினும் பஞ்சு இறக்குமதிக்கான சுங்க வரி, ஏஐடிசி ஆகியவற்றுக்கு ஏப்ரல் 14 முதல் செப்டம்பா் 30 வரை மட்டும் தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தற்போது உள்ள பஞ்சு விநியோகத்தை அதிகப்படுத்துவது, பஞ்சு உற்பத்தியை வலுப்படுத்துவது தொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது தற்போதைய தேவையை பூா்த்தி செய்வதற்கு பஞ்சு கையிருப்பு உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை எளிதாக்க வேண்டும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தாா். பஞ்சு மீதான இறக்குமதி வரி விலக்கை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் விவகாரத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

சில நாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளுக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையை ஜவுளித் துறையினா் அணுக வேண்டும் என மத்திய ஜவுளித் துறைச் செயலா் உபேந்திர பிரசாத் சிங் அறிவுறுத்தினாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com