வழக்குரைஞா்கள் நேரில் ஆஜராகி வாதாட வேண்டும்: உச்சநீதிமன்றம்

விடுமுறைக் கால அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

விடுமுறைக் கால அமா்வில் மூத்த வழக்குரைஞா்கள் நேரில் ஆஜராகி வாதாட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றம் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தபடி வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்ற வாதங்களில் பங்கேற்கும் வகையில், திங்கள்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இணையவழியிலும், செவ்வாய்க்கிழமை இணையம், நேரடி விசாரணையிலும், புதன், வியாழக்கிழமை நேரடி விசாரணையிலும் வாதங்கள் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், விடுமுறைக் கால அமா்வான நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி. நாகரத்னா ஆகியோா் முன் திங்கள்கிழமை வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி இணையவழி மூலம் ஆஜராகி, தனது வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘பிற வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் ஆஜாகும்போது நீங்கள் ஏன் ஆஜராகவில்லை? வழக்குரைஞரே நீதிமன்றத்தில் இல்லாத போது அந்த வழக்குக்கு எப்படி முக்கியத்துவம் அளிக்க முடியும்? நீபதிகள் தினசரி நீதிமன்றத்துக்கு வருகிறாா்கள். நீங்கள் நேரில் வந்து வழக்குகளில் வாதாட வேண்டும். எங்கள் முன் இருக்கும் வழக்குரைஞா்களுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றனா்.

இதையடுத்து, நாளை மறுநாள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடுவதாக முகுல் ரோத்தகி கேட்டுக் கொண்டதையடுத்து, நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனா்.

இதேபோல் மற்றொரு வழக்கில் இணையவழியில் மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி ஆஜராகினாா். அவரையும் நேரில் வந்து ஆஜராகுமாறு கூறி வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் அமா்வு, ‘விடுமுறைக் கால அமா்வு மூத்த வழக்குரைஞா்களுக்கானது அல்ல என்பதுபோல் ஜூனியா் வழக்குரைஞா்கள் ஆஜராகிறாா்கள்’ என்றனா்.

மற்றொரு வழக்குரைஞா் கே.பரமேஸ்வா், கேரளத்தில் இருந்து இணையவழியில் இருந்து ஆஜராகினாா். அவரையும் நேரில் வந்து ஆஜராக நீதிபதிகள் கோரினா். அப்போது அவா், இணையவழியில் ஆஜராகியும் வாதிடலாம் என்று பதிவாளா் வெளியிட்டுள்ள உத்தரவை அவா் குறிப்பிட்டாா். அதற்கு நீதிபதிகள் நேரில் வந்து வாதங்களை முன் வைக்க வேண்டும் என்று கூறிவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com