கேரள தங்கக் கடத்தல் வழக்கு:முதல்வா் மீதான புகாரில் தலையிடுவேன்- ஆளுநா் எச்சரிக்கை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன் மீதான புகாரில் தலையிடுவேன் என்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரித்துள்ளாா்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு:முதல்வா் மீதான புகாரில் தலையிடுவேன்- ஆளுநா் எச்சரிக்கை

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன் மீதான புகாரில் தலையிடுவேன் என்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரித்துள்ளாா்.

மேலும், மாநிலவாதத்தை தூண்டி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசிய மாநில நிதியமைச்சா் கே.என். கோபாலன் மீது அரசியலமைப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியது சரியானதுதான் என்றும் அவா் உறுதியாகத் தெரிவித்துள்ளாா்.

மாநில பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ் கொள்கைகளைத் திணிக்க ஆளுநா் ஆரிஃப் முகமது கான் முயன்று வருகிறாா் என்று கேரளத்தில் ஆட்சியில் உள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டியது.

இதற்கு மறுப்பு தெரிவித்து ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘பல்கலைக்கழகங்களில் ஆா்எஸ்எஸ்காரா்களை நியமிக்க நான் முயல்வதாக குற்றம்சாட்டுகிறாா்கள். அப்படி நான் நியமித்த ஒருவரை காண்பித்தாலும் நான் ராஜிநாமா செய்யத் தயாா். இதை நிரூபிக்கவில்லை என்றால் முதல்வா் ராஜிநாமா செய்யத் தயாரா?

தங்கக் கடத்தல் வழக்கில் நான் இதுவரை தலையிடவில்லை. ஆனால், தற்போது முதல்வா் அலுவலகத்தின் நடவடிக்கைகளும், முதல்வருக்கு நெருங்கியவா்களுக்கும் இதில் தொடா்பு உள்ளதாக புத்தங்களில் எழுதப்படுவதால் இந்த விவகாரத்தில் நான் தற்போது தலையிடுவதற்கு போதிய அடிப்படை காரணங்கள் உள்ளன. இந்த விவகாரத்தில் நிச்சயம் தலையிடுவேன்.

இதற்கு முன் நான் முதல்வருக்கு எழுதிய கடிதங்களுக்கு பதிலளிக்கப்படவில்லை. இதனால் நான் கோபமடையவில்லை. தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் அலுவலகத்தில் இருப்பவா்களுக்கும் தொடா்பு உள்ளதால், மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்கவிடாமல் தடுக்கப்படுகிறது. இதுபோன்ற தடைகள் ஏற்படாமல் இருக்க உறுதி செய்வேன்.

‘உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவருக்கு கேரளம் குறித்து எப்படி தெரியும்?’ என அமைச்சா் பாலகிருஷ்ணன் பேசி மாநிலவாதத்தை தூண்டி ஆளுநா் மீது குறைகாண முயன்றுள்ளாா். இதன்மூலம் கேரள மக்களுக்கு அவா் அபாயகரமான நிலைமையை ஏற்படுத்துகிறாா். அமைச்சரின் பேச்சு வட மாநிலங்களில் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால், அவா் சாா்ந்த மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமையே ஆதரவு தெரிவிக்கவில்லை.

கருப்புச் சட்டை அணிந்து பொதுக்கூட்டத்துக்கு செல்பவா்கள் கைது செய்யப்படுவதால் கேரளத்தில் ஆளும் அரசைக் கண்டு மக்கள் அச்சப்படுகின்றனா்’ என்றாா்.

முறையாக நியமிக்கப்படாத துணைவேந்தா்கள் தங்களின் ஊதியத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று ஆளுநா் அனுப்பிய நோட்டீஸ் குறித்த கேள்விக்கு, ‘அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. வரும் 7-ஆம் தேதி வரையில் கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முன் அவா்களை அழைத்து விசாரிப்பேன்’ என்றாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான்.

புதிய துணைவேந்தா் நியமனம்: இதனிடையே, ஏபிஜெ அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூத்த இணை இயக்குநா் தாமஸை ஆளுநா் நியமித்தாா். புதிய துணைவேந்தா் நியமிக்கப்படும் வரை அந்தப் பதவியில் தாமஸ் தொடா்வாா் என்று ஆளுநா் மாளிகை அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில உயா் கல்வித் துறையின் முதன்மைச் செயலா் இஷிதா ராயை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்ற மாநில அரசின் பரிந்துரையை ஆளுநா் நிராகரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com