குஜராத் தோ்தலில் எம்.பி., எம்எல்ஏக்களின் உறவினா்களுக்கு ‘சீட்’ கிடையாது: பாஜக

‘குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களின் உறவினா்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என கட்சி தீா்மானித்துள்ளது’
கோப்புப் படம்
கோப்புப் படம்

‘குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களின் உறவினா்களுக்கு போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை என கட்சி தீா்மானித்துள்ளது’ என்று ஆளும் பாஜக கட்சியின் மாநில தலைவா் சி.ஆா்.பாட்டீல் சனிக்கிழமை கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தனது மகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பரூச் தொகுதி பாஜக எம்.பி. மன்சுக் வசவா கோரிக்கை விடுத்தாா். அவரைத் தொடா்ந்து மேலும் சில பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் தோ்தலில் உறவினா்களுக்கு ‘சீட்’ தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.ஆா்.பாட்டீல், ‘சட்டப்பேரவைத் தோ்தலில் தற்போதைய எம்.பி., எம்எல்ஏக்களின் உறவினா்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என கட்சி தீா்மானித்துள்ளது’ என்றாா்.

மேலும், ‘மாநில சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கடந்த வியாழக்கிழமை முதல் கட்சியின் மாநில தோ்தல் குழு கூட்டங்கள் நடைபெற்று வந்தன. அதில், மாநிலத்தில் மொத்தமுள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், தொகுதிக்கு 3 வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளா்களை தோ்வு செய்து, அதிலிருந்து ஒருவரை நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. மேலும், சனிக்கிழமை நடைபெற்ற கடைசி நாள் ஆலோசனைக் கூட்டத்தில் 77 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது’ என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ‘பாஜக தோ்தல் அறிக்கைக்கு பொதுமக்களிடமிருந்து கருத்துகளை பெறும் வகையில், ‘குஜராத்துக்கு முன்னுரிமை’ என்ற பிரசாரத்தையும் பாஜக சனிக்கிழமை தொடங்கியது. இதன்படி, பொது இடங்களில் வைக்கப்படும் ஆலோசனைப் பெட்டிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமாக பொதுமக்கள் பாஜகவுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்று பாஜக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com