குடும்ப உறவு, பந்த பாசங்களை முற்றிலும் துறக்கிறேன்: உமா பாரதி அறிவிப்பு!

வரும் 17 ஆம் தேதி முதல் குடும்ப உறவுகளை, பந்த பாசங்களை முற்றிலும் துறக்கப் போவதாக தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் உமாபாதி
குடும்ப உறவு, பந்த பாசங்களை முற்றிலும் துறக்கிறேன்: உமா பாரதி அறிவிப்பு!
Published on
Updated on
2 min read

போபால்: சந்நியாசியாக 30 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் நிலையில், தனது குருவின் அறிவித்தலின்படி, வரும் 17 ஆம் தேதி முதல் குடும்ப உறவுகளை, பந்த பாசங்களை முற்றிலும் துறக்கப் போவதாக தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் உமாபாதி(63), உலக மக்களுக்கான தாயாக. சகோதரியாக நான் இருப்பேன் என்று தொடர் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். 

தேசிய அரசியலில் பாஜகவின் எழுச்சியைத் தூண்டிய ராமர் கோயில் இயக்கத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியுமான உமாபாரதி, இரண்டு நாள்களில் 27 ட்வீட்களை வெளியிட்டுள்ளார். 

கடந்த 1992 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி எனது குருவான "ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ்" கரங்களால் தீட்சை வாங்கி சந்நியாசம் பெற்றேன். 

கடந்த மார்ச் மாதம் மீண்டும் எனது குருவான "ஜெயின் முனி ஆச்சார்யா வித்யாசாகர் மகராஜ் சந்தித்த போது, அனைத்து தனிப்பட்ட வாழ்க்கையின் உறவுகளையும் முற்றிலும் துறந்துவிட்டு, இந்திய குடிமக்கள் அனைவரையும் தத்தெடுக்க வேண்டும். ஒட்டுமொத்த உலக சமூகமும் எனது குடும்பமாக இருக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். 

சந்நியாசியாக 30 ஆவது ஆண்டுகள் நிறைவையொட்டி, அவரது கட்டளைகளின் படி, வரும் 17 ஆம் தேதி முதல் குடும்ப உறவுகளை முற்றிலும் துறக்கிறேன்.

எனது உலகமும் குடும்பமும் மிகவும் பரந்து விரிந்துள்ளன. இப்போது நான் ஒட்டுமொத்த உலக மக்களுக்கு தாயாக, சகோதரியாக இருப்பேன். எனக்கு தனிப்பட்ட குடும்பம் எதுவும் இல்லை" என்று காவி அங்கி அணிந்த அரசியல்வாதி உமாபாரதி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் மற்றும் மத்திய பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர். சந்நியாசியாக இருந்து இருந்து கொண்டு முதல்வர் பதவி வகித்த முதல் நபர் என்ற பெருமைக்கு சொந்தக்கார் உமாபாரதி.

சில காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த உமாபாரதி, கடைசியாக மத்தியப்பிரதேசத்தில் மதுவிலக்கு கோரி பிரசாரத்தில் ஈடுபட்டார். இது தனது சொந்தக் கட்சியான பாஜகவுடன் ஏற்பட்ட அதிருப்தியையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், “எனது குடும்பம், எனது சகோதரர்கள், மருமகன்கள் மற்றும் மருமகள் எனக்கு அரசியலில் நிறைய ஆதரவைக் கொடுத்தனர், மேலும், தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் நான் பொய் வழக்குகள், துன்புறுத்தல் மற்றும் பல சிரமங்களை அனுபவித்தேன். " என்று கூறியுள்ளார். 

மற்றொரு பதிவில், "எனது பெற்றோர்கள் கொடுத்த உயர்ந்த மதிப்புகள், எனது குருவின் அறிவுரைகள், எனது சாதி மற்றும் குலத்தின் கண்ணியம், எனது கட்சியின் சித்தாந்தம் மற்றும் எனது நாட்டிற்கான எனது பொறுப்பு, இதிலிருந்து நான் ஒருபோதும் என்னை விடுவித்துக் கொள்ள மாட்டேன். நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்" என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com