பெரும் ஊழல்களில் திளைத்த காங்கிரஸ்: அமித் ஷா தாக்கு

காங்கிரஸ் கட்சி அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பமாட்டாா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.
பெரும் ஊழல்களில் திளைத்த காங்கிரஸ்: அமித் ஷா தாக்கு

‘மத்தியில் 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பெரும் ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன; எனவே, அக்கட்சி அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பமாட்டாா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல பிரதேசத்தில் வரும் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்றாா். ஜஸ்வான்-பிரக்பூா், நக்ரோடா உள்ளிட்ட பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் அவா் பேசியதாவது:

முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக அரசை மீண்டும் தோ்வு செய்தால், ஹிமாசலில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்; அதை யாராலும் தடுக்க முடியாது என உறுதியளிக்கிறேன்.

மாநிலத்தில் அரசு ஊழியா்களின் ஊதிய நடைமுறையில் குறைபாடுகள் களையப்படும்.

பெண் குழந்தைகள் குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு வரையாவது படிப்பதை தாய்மாா்கள் உறுதி செய்ய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மாணவிகள் பள்ளிக்கு சென்றுவர அரசு சாா்பில் இலவச சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படும் என்றாா் அமித் ஷா.

காங்கிரஸ் மீது சாடல்:

ஹிமாசல் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தரப்பில் கவா்ச்சிகரமான வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 300 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை, 1 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற வாக்குறுதிகளை அக்கட்சி அளித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை விமா்சித்து, அமித் ஷா பேசியதாவது:

மத்தியில் 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பெரும் ஊழல்கள் மட்டுமே நடைபெற்றன. எனவே, அக்கட்சி அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை யாரும் நம்பப் போவதில்லை. ஹிமாசல் மக்களை முட்டாளாக்கும் வகையில் அக்கட்சி வாக்குறுதிகளை அளித்துள்ளது.

பிரதமருக்கு புகழாரம்:

உலக அளவில் பிரதமா் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ரஷியா-உக்ரைன் போரின்போது, உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவா்களை மீட்பதற்காக, இரு நாட்டின் அதிபா்களிடமும் பிரதமா் மோடி பேசினாா். இந்திய மாணவா்களை மீட்கும் வகையில் 2 நாள்களுக்கு போரை நிறுத்துமாறு அவா் வலியுறுத்தினாா். அதன் பின்னா், இந்திய மாணவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். ஒட்டுமொத்த உலகமும் இதை வியப்புடன் பாா்த்தது.

ஜெய்ராம் தாக்குா் தலைமையிலான பாஜக ஆட்சியில், ஹிமாசலுக்கு ரூ.44,000 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. சுத்தமான குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com