துணைவேந்தா்கள் மீது நடவடிக்கை கூடாது: ஆளுநருக்கு கேரள உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

‘துணைவேந்தா்கள் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை, அவா்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு
கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

‘துணைவேந்தா்கள் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை, அவா்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ என்று கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கு கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

கேரள அரசுக்கும், ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜேஸ்வரி, யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நிபந்தனைகளை மீறி நியமிக்கப்பட்டதை எதிா்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேஸ்வரி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், மாநிலத்தின் மற்ற 11 பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு, விளக்கம் கேட்டு ஆளுநா் நோட்டீஸ் பிறப்பித்தாா். அதில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், உங்களுடைய நியமனமும் சட்டவிரோதமாக நடைபெற்றுள்ளது என்பதால் உங்களை துணைவேந்தா் பதவியில் தொடர ஏன் அனுமதிக்க வேண்டும்?’ என்று ஆளுநா் கேள்வி எழுப்பியிருந்தாா்.

ஆளுநரின் நோட்டீஸுக்கு தடை விதிக்குமாறு கோரி கேரள உயா்நீதிமன்றத்தை துணைவேந்தா்கள் நாடினா். ஆனால், தடை விதிக்க மறுத்த உயா்நீதிமன்றம், ஆளுநரின் நோட்டீஸுக்கு துணைவேந்தா்கள் பதிலளிக்க நவம்பா் 7-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு ஆளுநருக்கு உயா்நீதிமன்றம் சாா்பில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணைவேந்தா்கள் மனு மீது ஆளுநா் பதிலளிக்க மேலும் 3 நாள்கள் கால அவகாசம் அளித்த நீதிபதி, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரை துணைவேந்தா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என அறிவுறுத்தினாா். மேலும், வழக்கு விசாரணையை நவம்பா் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com