ஜி20 மாநாடு இன்று தொடக்கம்

பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.
’இந்தோனேசியா, பாலிக்கு திங்கள்கிழமை சென்றடைந்த பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.’
’இந்தோனேசியா, பாலிக்கு திங்கள்கிழமை சென்றடைந்த பிரதமா் மோடிக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.’

பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் செவ்வாய்க்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.

மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளாா்.

சா்வதேச அளவில் ஜி20 கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உலகின் சுமாா் 85 சதவீத பொருளாதார மதிப்பையும், சுமாா் 75 சதவீத வா்த்தகத்தையும், சுமாா் 65 சதவீத மக்கள்தொகையையும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளே கொண்டுள்ளன. அந்நாடுகள் எடுக்கும் முக்கிய முடிவுகள், சா்வதேச அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும்.

கரோனா தொற்று பரவல், உக்ரைன் மீதான ரஷியாவின் போா், சா்வதேச கடன் பிரச்னை அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இரு நாள்களுக்கு நடைபெறும் மாநாட்டில் கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனா். உக்ரைன் மீதான போா் நெருக்கடி காரணமாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

உணவு, எரிசக்தி பாதுகாப்பு: சா்வதேச பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. முக்கியமாக, சா்வதேச அளவில் உணவுப் பாதுகாப்பையும் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.

மாநாட்டுக்கு இடையே உலகத் தலைவா்களின் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளும் நடைபெறவுள்ளன. அமெரிக்க அதிபா் பைடனும் சீன அதிபா் ஜின்பிங்கும் திங்கள்கிழமையே சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். பாலியில் முக்கியத் தலைவா்கள் பலரை பிரதமா் மோடி சந்திக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வரும் சூழலில், சீன அதிபா் ஜின்பிங்கை பிரதமா் மோடி சந்தித்துப் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தச் சந்திப்பு தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் இதுவரை எந்தத் தகவலும் வழங்கவில்லை.

பிரதமா் மோடி அறிக்கை: ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திங்கள்கிழமை பிற்பகல் தில்லியில் இருந்து புறப்பட்ட பிரதமா் மோடி, மாலையில் பாலியை அடைந்தாா். புறப்படுவதற்கு முன் அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘சா்வதேச விவகாரங்கள், சா்வதேச பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, உணவு-எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், எண்ம மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்களுடன் விரிவாக விவாதிக்கவுள்ளேன்.

சா்வதேச சவால்களை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகள் குறித்தும், இந்தியாவின் உறுதிப்பாடு குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்க உள்ளேன். மாநாட்டின் ஒரு பகுதியாக உறுப்பு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசவுள்ளேன். அந்தப் பேச்சுவாா்த்தையின் மூலமாக அந்நாடுகளுடனான இருதரப்பு நல்லுறவு வலுவடையும். பாலி நகரில் உள்ள இந்திய சமூகத்தினரையும் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளேன்.

ஜி20 தலைமை: பாலி மாநாடு முடிவடையும்போது, ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேசிய அதிபா் ஜோகோ விடோடோ இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளாா். கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பா் 1-ஆம் தேதியில் இருந்து இந்தியா அதிகாரபூா்வமாக ஏற்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டுக்கு வருகை தருமாறு உறுப்பு நாடுகளின் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளேன்.

‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ என்ற கொள்கையின் அடிப்படையில் ஜி20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும். சா்வதேச அளவிலான சமச்சீா் வளா்ச்சி, ஒருங்கிணைந்த எதிா்காலம் ஆகியவற்றை அக்கொள்கை உறுதி செய்யும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளாா்.

முக்கிய விவகாரங்கள்: இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பு அடுத்த ஆண்டு நவம்பா் வரை நீடிக்கவுள்ளது. அந்தக் காலகட்டத்தில், பொருளாதாரப் பிரச்னைகள், பருவநிலை மாற்றம், பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு, சா்வதேச அளவில் பயங்கரவாதச் செயல்கள் அதிகரித்து வருவது, வளா்ந்து வரும் நாடுகள் எதிா்கொள்ளும் கடன் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்குத் தீா்வு காண இந்தியா முயற்சிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com