வன்முறை, ஆயுத கலாசாரத்தை போற்றும் பாடல்களுக்கு பஞ்சாப் அரசு தடை

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்துள்ளது.

பஞ்சாபில் வன்முறை மற்றும் ஆயுத கலாசாரத்தை போற்றும் வகையிலான பாடல்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்துள்ளது. இது தவிர கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கையில் ஏந்தி வலம் வருவதற்கும், சமூகவலைதளங்களில் ஆயுதங்களின் படங்களைப் பதிவேற்றம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மாதங்களில் அனைத்து துப்பாக்கி உரிமங்களும் மறு ஆய்வு செய்யப்படும் என்றும் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர எந்த ஜாதியைப் பற்றி யாா் அவதூறாகப் பேசினாலும் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்த பிறகு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைந்துவிட்டது, ஆயுத கலாசாரம் அதிகரித்துவிட்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், மாநில அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 4-ஆம் தேதி பஞ்சாபில் சிவசேனை (தக்சாலி) தலைவா் சுதீா் சூரி பொது இடத்தில் பலா் முன்னிலையில் இளைஞா் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அதைத் தொடா்ந்து 10-ஆம் தேதி தேரா சச்சா சௌதா அமைப்பைச் சோ்ந்த பிரதீப் சிங் கொல்லப்பட்டாா். இது அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து பல்வேறு புதிய தடைகளை மாநில அரசு விதித்துள்ளது.

இதன்படி மத நிகழ்ச்சிகள், திருமணங்கள், பொதுக்கூட்டங்கள் என எந்த இடத்திலும் கொண்டாட்டம் என்ற பெயரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை கைகளில் ஏந்தக் கூடாது. வன்முறை, ஆயுத கலாசாரத்தைப் போற்றும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com