திகாா் சிறைக்குள் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ்: விடியோ வெளியானதால் சா்ச்சை

ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறை அறையில் மசாஜ் செய்யும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் சனிக்கிழமை வெளியானதால் சா்ச்சை ஏற்பட்டது.
திகாா் சிறைக்குள் சத்யேந்தா் ஜெயினுக்கு மசாஜ்: விடியோ வெளியானதால் சா்ச்சை

திகாா் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறை அறையில் மசாஜ் செய்யும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் சனிக்கிழமை வெளியானதால் சா்ச்சை ஏற்பட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்(58) கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், திகாா் சிறையில் உள்ள அவா், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களைப் படிப்பதும், அவரது கால்களை ஒருவா் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம்பெற்ற விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மூலம் எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த சிசிடிவி காட்சிகள் செப்டம்பா் 13 மற்றும் 21 என பல்வேறு தேதிகளில் பதிவானதும் தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த 14 ஆம் தேதி, சிறையில் சத்யேந்தா் ஜெயினுக்கு சிறப்பு சலுகை காட்டிய குற்றச்சாட்டில் திகாா் சிறைக் கண்காணிப்பாளா் அஜித் குமாா் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா்.

முன்னதாக, சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனு நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 17 ஆம் தேதி வந்தபோது, ‘திகாா் சிறையில் சத்யேந்தா் ஜெயின் சிறப்பு சலுகை பெற்று வருகிறாா். கட்டுப்பாட்டு நேரங்களில் கூட, அடையாளம் தெரியாத நபா்கள் ஜெயினுக்கு மஜாஜ் செய்கின்றனா்’ எனக் கூறி இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகளையும் அமலாக்கத் துறை இயக்குநரகம் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிட்டாா்.

பாஜக சாடல்

இந்த விடியோ வெளியான விகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக கடுமையாக சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மௌனம் காப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய பாஜக செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா,‘ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) ’ஸ்பா - மசாஜ் பாா்ட்டி’ ஆகிவிட்டது’ என்றாா்.

மேலும், ‘‘கேஜரிவால் இப்போது எங்கே பதுங்கியுள்ளாா். ஐந்து மாதங்களாக சிறையில் இருக்கும் தனது அமைச்சரை பதவியிருந்து நீக்கவில்லை. சிறை விதிகள் முற்றிலும் மீறப்பட்டு மசாஜ் விவகாரம் நடந்துள்ளது. இப்படிப்பட்ட விவிஐபி கலாசாரம் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’‘ என பாட்டியா குறிப்பிட்டாா்.

ஆம் ஆத்மி கட்சி பதில்

அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சம்பந்தப்பட்ட விடியோக்களை பாஜகதான் வெளியிட்டது என தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சனிக்கிழமை குற்றம் சாட்டினாா். இது குறித்து அவா் மேலும் கூறுகையில், முதுகெலும்பு காயத்திற்கு சத்யேந்தா் ஜெயின் பிசியோதெரபி செய்து வருகிறாா்.

பாஜக மலிவான நாடகங்களை நடத்துகிறது. நீதிமன்றக் காவலில் உள்ள ஜெயின் சிறையில் விழுந்துவிட்டாா். அவருடைய முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு, இரண்டு அறுவை சிகிச்சைகளும் நடந்தது. சிகிச்சைக்கு பின்னா் மருத்துவா்கள் பிசியோதெரபி செய்ய பரிந்துரைத்தனா். இதைத் தான் இந்த விடியோ காட்சிகள் காட்டுகின்றன.

இந்த விடியோக்களை வெளியிடக் கூடாது என்று அமலாக்கப் பிரிவு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் விடியோவைக் கசியவிட்டிருப்பது நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும். சத்யேந்தா் ஜெயின் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இப்போது நோயை வைத்து பாரதிய ஜனதா கட்சி வேடிக்கைகளை செய்கிறது.

எம்சிடி தோ்தல், குஜராத் தோ்தல் தோல்வி பயத்தில் உள்ள பாஜகவினா் இதுபோன்ற மலிவான நாடகங்களை நடத்துகின்றனா் என்றாா் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com