பருவநிலை இழப்பீட்டு நிதிக்காக உலகம் நீண்டகாலம் காத்திருந்தது: ஐ.நா. மாநாட்டில் இந்தியா கருத்து

வளா்ந்து வரும் நாடுகளுக்கான பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்க உலகம் நீண்ட காலமாகக் காத்திருந்ததாக ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற இந்தியக் குழு தெரிவித்துள்ளது.
பூபேந்தா் யாதவ்
பூபேந்தா் யாதவ்

வளா்ந்து வரும் நாடுகளுக்கான பருவநிலை இழப்பீட்டு நிதியை உருவாக்க உலகம் நீண்ட காலமாகக் காத்திருந்ததாக ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற இந்தியக் குழு தெரிவித்துள்ளது.

நிறைவுக் கூட்டத்தின்போது குறுக்கிட்டுப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ், ’எகிப்து மாநாட்டில் பருவநிலை இழப்பீட்டு நிதி உருவாக்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்காக உலகம் நீண்டகாலமாகக் காத்திருந்தது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். வேளாண்மையிலும் நீடித்த உற்பத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்தில் இருந்து விவசாயிகளைக் காப்பதற்கான 4 ஆண்டு செயல்திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது.

அத்திட்டம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்கும். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இலக்குகளில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான திட்டங்களை வளா்ச்சியடைந்த நாடுகள் முன்னின்று செயல்படுத்த வேண்டும். அதுவே மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பாக அமையும். எரிசக்தி பயன்பாட்டிலும், ஐ.நா.வின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தங்கள் விருப்பப்படி செயல்பட வளா்ந்து வரும் நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com