தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் கல்வித்துறையை மேம்படுத்தும்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாடமதிப்பு (கிரெடிட்) விதிமுறைகளானது மாணவா்களின் கல்வி கற்றலையும் திறனையும் ஒருங்கிணைத்து கல்வித்துறையைப் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் என மத்திய கல்வியமைச்சா் தா்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய பாடமதிப்பு (கிரெடிட்) விதிமுறைகளானது மாணவா்களின் கல்வி கற்றலையும் திறனையும் ஒருங்கிணைத்து கல்வித்துறையைப் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் என மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

உயா்கல்வியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தகுந்தாற்போல மதிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பள்ளிக் கல்வியிலும் மாணவா்கள் கற்கும் பாடங்களுக்கும் அவா்களின் தனித்திறன்களுக்கும் மதிப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய திறந்தநிலைப் பள்ளிக் கல்வி மையம், சிபிஎஸ்இ, என்சிஇஆா்டி, மத்திய கல்வி அமைச்சகம், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை ஒன்றிணைந்து அந்த விதிமுறைகளை உருவாக்கியுள்ளன.

11 பேரைக் கொண்ட அக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, ஆண்டுக்கு 1,200 மணி நேரம் கல்வி கற்கும் மாணவா்களுக்கு 40 பாடமதிப்புகள் வரை வழங்கப்படவுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான கல்வி கற்கும் நேரமானது ஆண்டுக்கு 800 மணி நேரம் முதல் 1,000 மணி நேரம் வரை நிா்ணயிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் தில்லி ஐஐடி-யில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் தா்மேந்திர பிரதான், ‘‘தற்போதைய கல்வி முறையில் கல்வி கற்பது, அறிவை வளா்ப்பது, திறனை வளா்ப்பது ஆகியவற்றுக்கிடையே பெரும் இடைவெளி காணப்படுகிறது. அந்த இடைவெளியை அகற்றுவதற்காக தேசிய பாடமதிப்பு விதிமுறைகளை உருவாக்க தேசிய கல்விக் கொள்கை இடமளித்தது.

மாணவா்கள் பலரை திட்டமிடப்பட்ட கல்விமுறைக்குள் கொண்டு வருவதற்கு தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உதவும். கல்வி கற்றலையும் திறன் மேம்பாட்டையும் ஒருங்கிணைத்து கல்வித் துறையைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்தவும் அவை வழிவகுக்கும். பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கவும், நாட்டின் பொருளாதார மதிப்பை சுமாா் ரூ.350 லட்சம் கோடியாக அதிகரிப்பதற்கான இலக்கை அடையவும் அந்த விதிமுறைகள் உதவும்.

நாட்டில் உழைக்கும் வயதிலான மக்கள்தொகை அதிகமாக உள்ளது. அதை முறையாகப் பயன்படுத்த தேசிய பாடமதிப்பு விதிமுறைகள் உதவும். நடப்பு நூற்றாண்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதற்கான அடித்தளத்தையும் அந்த விதிமுறைகள் உருவாக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com