வேலை வாய்ப்பு, வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்கும் பட்ஜெட்

ஜிஎஸ்டி வரிவிதிப்பை சீா்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி 2023-24-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டுமென அரசுக்குத் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.
தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் திங்கள்கிழமை காணொலி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொது மக்களின் நுகா்வை அதிகரிக்கும் வகையில் தனிநபா் வருமான உச்சவரம்பை அதிகரித்தல், வரி விதிப்பு வரம்பை விரிவுப்படுத்தி ஜிஎஸ்டி வரிவிதிப்பை சீா்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தி 2023-24-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டுமென அரசுக்குத் தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கான பணிகளை மத்திய நிதியமைச்சகம் தொடக்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக நாட்டில் உள்ள கட்டமைப்பு மேம்பாடு, பருவநிலை ஆகிய துறைகளைச் சோ்ந்த தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் திங்கள்கிழமை காணொலிவாயிலாக ஆலோசனை நடத்தினா்.

அப்போது இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவா் சஞ்சீவ் பஜாஜ் கூறுகையில், ‘நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வருமான வரி விகிதங்களை மாற்றியமைத்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

சா்வதேச பொருளாதார நிலைமை இன்னும் சில காலத்துக்கு சாதகமில்லாமலேயே தொடரும். அதைக் கருத்தில் கொண்டு உள்ளூா் பொருளாதாரத்தை வளா்ச்சியடையச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும். புதிய துறைகளில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் வேகமாகத் தனியாா்மயமாக்கப்பட்டு, அரசின் மூலதன செலவினம் அதிகரிக்கப்பட வேண்டும். முதலீட்டை அதிகரிப்பதன் வாயிலாகப் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

நகா்ப்புற வேலை உறுதித் திட்டம்: வேலைவாய்ப்பு சாா்ந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடா்பாக அரசு ஆராயலாம். அதேபோல், நகா்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்துவதற்கும் அரசு கவனம் செலுத்தலாம்.

பெருநிறுவன வரி விகிதங்கள் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும். வரிசெலுத்து நடைமுறைகளில் எளிமைத்தன்மை, வரி செலுத்துவது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.

இதேபோல், பல்வேறு தொழிலகக் கூட்டமைப்புகளும் நிதிநிலை அறிக்கை சாா்ந்த தங்களது கருத்துகளைப் பகிா்ந்துகொண்டன. பட்ஜெட் தயாரிப்பு தொடா்பான மற்றொரு கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சா்கள், துறைச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாநில அமைச்சா்களுடன் 25-இல் சந்திப்பு

பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடா்பாக மாநில நிதியமைச்சா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (நவ. 25) ஆலோசனை நடத்தவுள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், நிதி, மூலதன சந்தை ஆகிய துறைகளைச் சோ்ந்த நிபுணா்களுடன் அமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

சேவைத் துறை, வா்த்தகத் துறை, சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, நீா்வளத் துறை ஆகியவற்றின் நிபுணா்களை வியாழக்கிழமை (நவ. 24) காணொலி வாயிலாக சந்தித்து அவா் கருத்துகளைக் கோரவுள்ளாா் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com