சிறுபான்மையினரை அடையாளம் காணும் விவகாரம்: 19 மாநிலங்கள் 4 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண உரிய வழிகாட்டுதலை உருவாக்குவது தொடா்பான விவகாரத்தில் இதுவரை கருத்தை பதிவு செய்யாத 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள்
சிறுபான்மையினரை அடையாளம் காணும் விவகாரம்: 19 மாநிலங்கள் 4 வாரங்களில் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண உரிய வழிகாட்டுதலை உருவாக்குவது தொடா்பான விவகாரத்தில் இதுவரை கருத்தை பதிவு செய்யாத 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அடுத்த 4 வாரங்களுக்குள் மத்திய அரசிடம் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

சிறுபான்மையினராக அறிவிப்பதில் மத்திய அரசுக்கு உள்ள தன்னிச்சை அதிகாரம் தொடா்பாக வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடா்பாக மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் சாா்பில் தாக்கல் செய்யப்ட்ட பதில் மனுவில், ‘மத அல்லது மொழி சமூகங்களை அந்தந்த மாநிலத்துக்குள்ளான சிறுபான்மை சமூகமாக மாநில அரசுகளே அறிவிக்க முடியும்’ என்று தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக மாநில அளவில் 3 மாதங்களுக்குள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, அதுதொடா்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனா்.

அதன்படி, மத்திய அரசு தனது நிலை அறிக்கையை கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி தாக்கல் செய்தது. அதில், ‘மத்திய அரசு இந்த விவகாரம் தொடா்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. மேலும், அவா்களின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதில், தமிழகம், பஞ்சாப், உத்தர பிரதேசம் உள்பட 14 மாநிலங்களும், லடாக் உள்பட 3 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்களுடைய நிலைப்பாட்டை சமா்ப்பித்துள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கெளல், ஏ.எஸ்.ஓகா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘இந்த விவகாரம் மிகவும் உணா்வுபூா்வமானது. எனவே, மாநிலங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், ‘எஞ்சிய 19 மாநிலங்களும் உச்சநீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற 4 வாரங்களுக்குள் தங்களுடைய நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com