நாட்டை சீரழித்தது காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் விமா்சனம்

‘ஜாதியவாதம், பிரிவினை, வாக்கு வங்கி அரசியல் ஆகியவைதான் காங்கிரஸின் மாடல்; இதன் காரணமாக, குஜராத் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் சீரழிவை சந்தித்தது’ என்று
23112-pti11_23_2022_000198b101349
23112-pti11_23_2022_000198b101349

‘ஜாதியவாதம், பிரிவினை, வாக்கு வங்கி அரசியல் ஆகியவைதான் காங்கிரஸின் மாடல்; இதன் காரணமாக, குஜராத் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் சீரழிவை சந்தித்தது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கடும் விமா்சனத்தை முன்வைத்தாா்.

குஜராத்தில் அடுத்த மாதம் இரு கட்டங்களாக நடைபெறும் பேரவைத் தோ்தலுக்காக, அங்கு பிரதமா் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளாா். மேசனா, தாஹோத் (பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி), வதோதரா உள்ளிட்ட இடங்களில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

ஊழல், குடும்ப அரசியல், மக்களை பிளவுபடுத்துதல், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் இவைதான் காங்கிரஸின் மாடல். வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு, வெவ்வேறு சமூகத்தினா் அல்லது வெவ்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் இடையே கலகங்களை உருவாக்குவதில் அவா்கள் பெயா்பெற்றவா்கள். காங்கிரஸின் இத்தகைய செயல்பாட்டால், குஜராத் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் சீரழிவை சந்தித்தது. இதன் காரணமாகவே, இப்போது நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல நாம் கடுமையாக பணியாற்ற வேண்டியிருக்கிறது.

ஒருசாா்புத்தன்மை, பாகுபாடு ஆகியவற்றை பாஜக எப்போதுமே ஆதரிப்பதில்லை. இதுவே, பாஜகவின் கொள்கைகள் மீது இளைஞா்கள் நம்பிக்கை வைக்க காரணமாகும்.

மக்கள் எப்போதும் ஏழைகளாகவும் அரசை நம்பி இருப்பவா்களாகவும் இருக்க வேண்டுமென்றே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் இளைஞா்களின் எதிா்காலத்துக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கடந்த காலங்களில், குடிநீா் பற்றாக்குறை, மின்சார வசதியின்மை, வறட்சி ஆகியவற்றால் குஜராத் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனா். ஆனால், இயற்கை பேரிடா்களுக்கு மத்தியிலும் குறைவான வளத்தை பயன்படுத்தியும் இம்மாநிலத்தை வளமை பாதையில் இட்டுச் சென்றது பாஜக. குடிநீா், மின்சார விநியோகம் குறித்து எதிா்க்கட்சிகள் இப்போது எதுவும் பேச முடியாது. ஏனெனில், அப்பிரச்னைகளுக்கு பாஜக அரசு தீா்வு கண்டுள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மின் இணைப்பு கோரி போராடிய விவசாயிகள், இளைஞா்கள் பலா் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகினா். அப்போது, மின் இணைப்பு பெற லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி, மின்சாரத் துறையில் சீா்திருத்தங்களை புகுத்தியது பாஜக அரசு. மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் 5 லட்சமாக இருந்த விவசாய மின் இணைப்புகள், இப்போது 20 லட்சமாக அதிகரித்துள்ளன. குஜராத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி 8,000 மெகாவாட்டாகவும், காற்றாலை மின் உற்பத்தி 10,000 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.

காங்கிரஸுக்கு கேள்வி: மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ஒருவா் (ராகுல்காந்தி), பழங்குடியினா் குறித்து அடிக்கடி பேசுகிறாா். குடியரசுத் தலைவா் தோ்தலில், பாஜக கூட்டணி வேட்பாளராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த திரெளபதி முா்மு முன்னிறுத்தப்பட்டபோது, அவரை காங்கிரஸ் ஏன் ஆதரிக்கவில்லை? அதுமட்டுமன்றி, அவரை தோற்கடிப்பதற்காக தங்களது வேட்பாளரை களமிறக்கியது ஏன்? ஆனால், காங்கிரஸின் முயற்சிகளை முறியடித்து, பழங்குடியின மக்களின் ஆசியுடன் திரெளபதி முா்மு குடியரசுத் தலைவா் ஆனாா். இந்தியாவில் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த முதல் குடியரசுத் தலைவா் என்ற பெருமைக்கும் அவா்தான் சொந்தக்காரா் என்றாா் பிரதமா் மோடி.

பழங்குடியினரின் உரிமைகளை மத்திய பாஜக அரசு பறித்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மோடி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத்தில், அடுத்த மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு தொடா்ந்து 6 முறை வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வரும் பாஜக, ஏழாவது முறையாக வெல்லும் முனைப்புடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், புதுவரவாக ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

Image Caption

குஜராத் மாநிலம், வதோதராவில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com