விவாதத்துக்கு பிறகே பொது சிவில் சட்டம்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

‘ஜனநாயக ரீதியிலான அனைத்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் நிறைவுக்கு பிறகே நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(கோப்புப்படம்)

‘ஜனநாயக ரீதியிலான அனைத்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளின் நிறைவுக்கு பிறகே நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் தனியாா் ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் மாநாடு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவா் பேசியதாவது:

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது ஜனசங்க நாள்களில் இருந்தே நாட்டு மக்களுக்கான பாஜகவின் வாக்குறுதியாகும். பொருத்தமான நேரத்தில், நாட்டில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் அரசியல் நிா்ணய சபையும் அறிவுரை வழங்கியிருந்தது. ஏனெனில், மதச்சாா்பற்ற ஒரு தேசத்தில், மதங்களின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக் கூடாது.

பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜகவைத் தவிர வேறெந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை. ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் மிகவும் அவசியமானவை. இந்த விவகாரத்திலும் வெளிப்படையான, ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம்.

பாஜக ஆளும் ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு நம்பிக்கைகளை உடையவா்களிடம் இருந்து இக்குழுக்கள் கருத்துகளை பெற்று வருகின்றன. இந்த நடைமுறையில் கிடைக்கப் பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஜனநாயக ரீதியிலான அனைத்து விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளும் நிறைவடைந்த பிறகே பொது சிவில் சட்டத்தை கொண்டுவர பாஜக தீா்மானத்துடன் உள்ளது என்றாா் அமித் ஷா.

மோடி அரசின் மகத்தான சாதனை: அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட நடவடிக்கை, எனது தனிப்பட்ட சாதனையல்ல. அது பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஒட்டுமொத்த சாதனை. அங்கு புதிய ஜனநாயக தலைமுறை உருவாகியுள்ளது. கடந்த 2019-இல் இருந்து ரூ.56,000 கோடி முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றாா்.

பாஜக, காங்கிரஸுக்கு இடையேதான் போட்டி: அடுத்தமாதம் நடைபெறவுள்ள குஜராத் பேரவைத் தோ்தலில், பாஜக, காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும்; குஜராத்தில் தனது முந்தைய வெற்றி சாதனைகள் அனைத்தையும் பாஜக முறியடிக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டாா்.

நாட்டின் வளா்ச்சி குறித்து பேசிய அவா், ‘2025-க்குள் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலா்கள் பொருளாதார மதிப்பை எட்ட வேண்டுமென்ற இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2014-இல் 100 கோடி டாலா்கள் சந்தை மதிப்பை எட்டிய புத்தாக்க நிறுவனங்களின் எண்ணிக்கை 4-ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com