பண மதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு: உச்சநீதிமன்றத்தில் ப. சிதம்பரம் வாதம்

கடந்த 2016-இல் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி, மதிப்பிழப்பு செய்த மத்திய அரசின் நடவடிக்கை முற்றிலும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்த 2016-இல் ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கி, மதிப்பிழப்பு செய்த மத்திய அரசின் நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு என்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் முறையிட்டு வாதாடினாா்.

கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என்பதாக கூறி மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை 2016-இல் அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குா் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எஸ்.ஏ. நசீா், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை மீண்டும் விசாரித்தது.

அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான ப.சிதம்பரம், ‘ரிசா்வ் வங்கியால் மட்டுமே ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற உரிமை உள்ளது. மத்திய அரசு தன்னிச்சையாக இதை செய்ய முடியாது. சட்டத்தை கேளிகூத்தாக்கும் வகையில் மத்திய அரசு முற்றிலும் தவறான முடிவை எடுத்துள்ளது. இதற்கு உசச்நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளாா். பெரும் பொருளாதார முடிவால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவில்லை. ரூ.2,300 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. ஆனால், அரசு அச்சகத்தால் மாதத்துக்கு ரூ.300 கோடி ரொக்கம் மட்டுமே அச்சடிக்க முடியும். ரூ.2000 நோட்டுகளை விநியோகிக்க 2,125,000 ஏடிஎம்கள் மாற்றியமைக்க வேண்டியிருந்தது. இதை எல்லாம் மத்திய அரசு கவனத்தில் எடுத்து கொள்ளவில்லை.

ரிசா்வ் வங்கியின் 2016-17 ஆண்டு அறிக்கையில் வெறும் ரூ.43 கோடிக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் குறிக்கோள் எப்படி நிறைவேறியதாகும்.

பயங்கரவாதிகளுக்கு கள்ள நோட்டுகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் ரூ.2,000 நோட்டுகள் இருந்துள்ளன.

99.3 சதவீத மதிப்பிழப்பு பணம் திரும்பி வந்துவிட்டதாக ரிசா்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லுபடியாகும் பணமாக மாற்றப்பட்டுவிட்டது என்பது இந்த முழு நடவடிக்கையின் இறுதி முடிவாகும்.

இந்த நடவடிக்கையால் நூற்றுக்கணக்கானோா் உயிா், வாழ்வாதாரம் இழந்தனா்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நசீா், ‘இது முடிந்துபோன நடவடிக்கை. இப்போது என்ன செய்ய முடியும்?’ என்றாா்.

இதற்கு ப. சிதம்பரம், ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை முற்றிலும் தவறான முடிவு என நீதிமன்றம் உத்தரவிட்டால், வருங்காலத்தில் இதுபோன்ற தவறான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடாது’ என்றாா். இந்த வழக்கின் விசாரணை அடுத்தவாரமும் தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com