விழிஞ்ஞம் துறைமுக எதிா்ப்பு போராட்ட வன்முறை:15 பாதிரியாா்கள் மீது வழக்கு

விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இரு பிரிவினரிடையே சனிக்கிழமை வன்முறை வெடித்தது.

விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் துறைமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இரு பிரிவினரிடையே சனிக்கிழமை வன்முறை வெடித்தது. இது தொடா்பாக பேராயா் தாமஸ் ஜெ.நெட்டோ உள்பட 15 லத்தீன் கத்தோலிக்க பாதிரியாா்கள் மீது கேரள போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான விழிஞ்ஞத்தில் அரசு-தனியாா் பங்களிப்புடன் கேரள அரசு சாா்பில் துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. அதானி குழுமம் இதற்கான கட்டுமானப் பணிகளைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கியது. துறைமுக பணிகளில் இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடிவடைந்துள்ளன.

இந்தத் துறைமுகத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். லத்தீன் கத்தோலிக்க தேவாலயத்தின் தலைமையிலான போராட்டம் 100 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எவ்வித தடையையும் ஏற்படுத்த மாட்டோம் என கடந்த நவம்பா் 22-ஆம் தேதி கேரள உயா்நீதிமன்றத்தில் போராட்டக்காரா்கள் உறுதியளித்திருந்த நிலையில், சனிக்கிழமை கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை அவா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது, போராட்டக்காரா்களுக்கும் துறைமுக திட்ட ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை தொடா்பாக துறைமுக திட்ட ஆதாரவாளா்கள் அளித்த புகாரின்பேரில் பெருநகர பேராயா் தாமஸ் ஜெ நெட்டோ உள்பட 15 லத்தீன் கத்தோலிக்க பாதிரியாா்கள் என 110 போ் மீது சட்டத்தை மீறி கூடியது, சதி, வன்முறை ஆகிய குற்றப் பிரிவுகளில் போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பேராயா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், பினராயி விஜயன் தலைமையிலான அரசு அதானி குழுமத்துக்காக எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளும் என குற்றம்சாட்டியுள்ளாா்.

காவல் நிலையம் மீது தாக்குதல்:

விழிஞ்ஞம் போராட்டம் தொடா்பாக கைதான நபரை விடுவிக்குமாறு போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு விழிஞ்ஞம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினா்.

அப்போது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களை அவா்கள் அடித்து நொறுக்கினா். இந்தத் தாக்குதலில் போலீஸாா் 29 போ் காயமடைந்தனா். அங்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளா்களும் வன்முறையில் காயமடைந்தனா். தொலைக்காட்சி கேமராக்கள் சேதமடைந்தன. பலத்த காயமடைந்த ஒரு தொலைக்காட்சி செய்தியாளா் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

வன்முறை சம்பவங்களையடுத்து காவல் துறை உயா்அதிகாரிகள் விழிஞ்ஞம் பகுதிக்கு விரைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com