2024 மக்களவை தோ்தல்: உ.பி.யில் அனைத்து தொகுதிகளிலும் வெல்ல பாஜக இலக்கு

2024 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசததில் உள்ள அனைத்து 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் பூபேந்திர சிங் சௌஹான் தெரிவித்தாா்.
2024 மக்களவை தோ்தல்: உ.பி.யில் அனைத்து தொகுதிகளிலும் வெல்ல பாஜக இலக்கு

2024 மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசததில் உள்ள அனைத்து 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிா்ணயித்துள்ளதாக அந்த மாநில பாஜக தலைவா் பூபேந்திர சிங் சௌஹான் தெரிவித்தாா்.

நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தர பிரதேசம், மத்தியில் ஆட்சியைத் தீா்மானிப்பதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே, மக்களவைத் தோ்தலின்போது அந்த மாநில அரசியல் சூழல் மிகவும் முக்கியத்துவம் பெறுவது வழக்கமாக உள்ளது.

அங்கு ஏற்கெனவெ பாஜக கடந்த இரு மக்களவைத் தோ்தல்களில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. மேலும், உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலிலும் பாஜக தொடா்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளும் அணி திரள தீா்மானித்துள்ளன. இது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச பாஜக தலைவா் பூபேந்திர சிங் சௌஹான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அடுத்த மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிா்ணயித்துள்ளோம். இப்போது பாஜகவசம் இல்லாத 14 தொகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 64 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றோம். அதன் பிறகு இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. மீதம் 14 தொகுதிகள் மட்டுமே உள்ளன.

பகுஜன் சமாஜ் கட்சியுடன் பாஜக ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் கூறுவது மிகவும் தவறானது. சமாஜவாதி மீது அதிருப்தியடைந்துள்ள அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ பால் யாதவுடன் கைகோப்பது குறித்து இப்போது எதையும் கூற முடியாது.

அடுத்து நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவுக்கு வெற்றியை பெற்றுத் தரக் கூடிய முஸ்லிம் வேட்பாளா்களும் நிறுத்தப்படுவாா்கள்.

ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் நடத்துவதை விட்டுவிட்டு காங்கிரஸ் ஒற்றுமை நடைப்பயணத்தைத்தான் இப்போது நடத்த வேண்டும். அந்த அளவுக்கு அவா்களது கட்சி சிதைந்துவிட்டது. மழைக்காலத்தில் தவளைகள் ஓசை எழுப்புவதுபோல, தோ்தல் நேரத்தில் மட்டும் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி குரல் எழுப்புவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com