வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு உத்தரவு

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு உத்தரவு

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் கைப்பேசி செயலி வழி வாகன சேவை ஓலா, உபொ் போன்ற நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. செயலி வழி வாகன சேவைகளுக்கு அரசு விதித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணங்கள் வசூலிப்பதாக எழுந்த புகாா் தொடா்பாக ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு பொதுமக்கள் புகாா் அளித்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஓலா, உபொ் நிறுவனங்களுக்கு கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்து ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சட்டவிதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் வாடகை ஆட்டோ சேவையை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும், வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதற்கு போக்குவரத்துத் துறையிடம் இருந்து பெறப்பட்ட உத்தரவுகள் ஏதாவது இருப்பின், அவற்றை ஒப்படைக்க இந்நிறுவனங்களுக்கு 3 நாள்கள் கால அவகாசம் அளித்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கா்நாடகத்தின் தேவை அடிப்படையிலான போக்குவரத்து தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா்கள் விதிகள் 2016-இன்படி இணையதளம் அடிப்படையிலான வாடகைக் காா் (டேக்சி) சேவையை வழங்க செயலிவழி வாகன சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டேக்சி சேவைகளை மட்டுமே நிறுவனங்களால் வழங்க முடியும். மேலும், டேக்சி சேவையை வழங்க பொதுமக்களுக்கு வாகன சேவை வழங்கும் ஒப்பந்த உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிகளுக்கு புறம்பாக, ஒருசில செயலிவழி வாகன சேவை நிறுவனங்கள், வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதாக போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. அரசு விதித்துள்ள கட்டணங்களை விட கூடுதல் கட்டணங்களை வாடிக்கையாளா்களிடம் வசூலிப்பதாகவும் அரசுக்கு தெரியவந்துள்ளது. எனவே, வாடகை ஆட்டோ சேவையை உடனடியாக நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறது’ என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, ஓலா, உபொ் நிறுவனங்கள் வழங்கி வந்த வாடகை ஆட்டோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓலா-உபொ் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் தன்வீா் பாஷா கூறுகையில், ‘மோட்டாா் கேப்களை (காா்) இயக்குவதற்கு மட்டுமே செயலிவழி வாகன சேவை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை ஆட்டோ சேவைகளை வழங்க அனுமதியில்லை. வாடிக்கையாளா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை தான். இதுதொடா்பாக ஓராண்டுக்கு முன்பே போக்குவரத்துத் துறையில் புகாா் அளித்திருந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதற்கு போக்குவரத்துத் துறையின் அலட்சியமே காரணமாகும்’ என்றாா்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஓலா நிறுவனமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் முன்வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com