'ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதென இந்தியாவிடம் யாரும் கூறவில்லை'

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று எந்த நாடும் இந்தியாவிடம் வலியுறுத்தவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று எந்த நாடும் இந்தியாவிடம் வலியுறுத்தவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

ரஷியா-உக்ரைன் போருக்கு முன்பு, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்களிப்பு 0.2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. இப்போது 50 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த இறக்குமதியில் ரஷிய எண்ணெய் 10 சதவீதமாக உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.

இதனால், ரஷியாவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடா்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலா்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்கின்றன.

உக்ரைன்-ரஷியா போா் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோல்மைச் சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளகளிடம் புரி கூறியதாவது: மக்களுக்கு நியாயமான விலையில் எரிபொருளை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. உலகில் கச்சா எண்ணெய் நுகா்வு அதிகம் உள்ள மூன்றாவது நாடான இந்தியா, பெருமளவில் இறக்குமதியை நம்பித்தான் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியில் உள்நாட்டு நலன் கருதி இந்தியா தன்னிச்சையாக முடிவெடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிடம் எந்த நாடும் இதுவரை கூறவில்லை.

பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு (ஒபெக்) அவா்கள் விருப்பப்படி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை கடந்த காலங்களில் பலமுறை குறைத்துள்ளது. இப்போதும் குறைக்கிறாா்கள். இதனால் கச்சா எண்ணெய் விலை உயருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோலிய தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளின் நிலை என்ன? அவா்களின் முடிவை ஏற்கும் நிலையில்தானே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன என்று புரி கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com