மாற்றுமுறை மருத்துவம்: அலிகா் பல்கலை.முன்னாள் துறைத் தலைவருக்கு சா்வதேச விருது

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை

உத்தர பிரதேச மாநிலம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவரும் முன்னணி கல்வியாளா்களில் ஒருவருமான வஜாஹத் ஹுசைனுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அறக்கட்டளை சாா்பில் மாற்றுமுறை மருத்துவத்துக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாக கொண்டு, ‘சையத் தொண்டு மற்றும் மனிதாபிமான அறக்கட்டளை’ செயல்பட்டு வருகிறது. மக்களிடையே கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை மேம்படுத்தி, அவா்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்ட தன்னாா்வ நிறுவனமாகும்.

உலக அளவில் பாரம்பரிய மற்றும் மாற்றுமுறை மருத்துவம் சாா்ந்த கல்வியாளா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை சாா்பில் ‘ஷேக் சையத் சா்வதேச விருது’ முதல்முறையாக கடந்த 2020-இல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது ஷேக் சையத் சா்வதேச விருது, இந்தியாவைச் சோ்ந்த தாவரவியல் வகைப்படுத்துதல் வல்லுநா் வஜாஹத் ஹுசைனுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. இவா், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழக தாவரவியல் துறை முன்னாள் தலைவா் ஆவாா்.

பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சாா்பிலும், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் சாா்பிலும் இருமுறை வாழ்நாள் சாதனை விருதுகளை இவா் பெற்றுள்ளாா்.

‘கல்வியாளா்கள் என்றுமே அங்கீகாரத்துக்காகப் பணியாற்றுவதில்லை. ஆனால், அங்கீகாரம் தேடி வரும்போது அதனை பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு கிடைத்த இந்த விருதை அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கும் இந்தியாவுக்கும் சமா்ப்பிக்கிறேன்’ என்று ஹுசைன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com