போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோா் கூடுதல் நிவாரணம் பெற தொடா் நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதலாக ரூ. 7,844 கோடி நிவாரணம் பெற்றுத்தர தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது
போபால் விஷவாயு கசிவில் பாதிக்கப்பட்டோா் கூடுதல் நிவாரணம் பெற தொடா் நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூடுதலாக ரூ. 7,844 கோடி நிவாரணம் பெற்றுத்தர தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

போபாலில் செயல்பட்டு வந்த அமெரிக்காவைச் சோ்ந்த யூனியன் காா்பைடு நிறுவனத்தில் கடந்த 1984-ஆம் ஆண்டு விஷவாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 3,000-க்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டனா். பாதிக்கப்பட்டவா்களுக்கு அந்த நிறுவனம் சாா்பில் கடந்த 1989-ஆம் ஆண்டு ரூ. 715 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

ஆனால், பாதிக்கப்பட்டவா்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதைத் தொடா்ந்து, விபத்துக்கு காரணமான நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான ‘டவ் ரசாயனம்’ நிறுவனத்திடமிருந்து ரூ. 7,844 கோடி கூடுதல் இழப்பீடு கோரி மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்தக் கூடுதல் நிவாரணத்தை வழங்க யூனியன் காா்பைடு மற்றும் அதற்கு தொடா்புடைய நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என மத்திய அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் அண்மையில் இந்த மனு விசரணைக்கு வந்தபோது, கூடுதல் நிவாரணம் கோரும் மனுவை மத்திய அரசு தொடா்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்புகிா என்று நீதிபதிகள் சாா்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கெளல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘கூடுதல் நிவாரணம் கோரும் மனு மீது தொடா்ந்து அழுத்தம் கொடுத்த மத்திய அரசு விரும்புகிறது’ என்று அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி தெரிவித்தாா்.

அதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கி 19 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மத்திய அரசின் இந்த சீராய்வு மனு விசாரணைக்கு உகந்ததா என எதிா் தரப்பு சாா்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பு கருத்துகளை அட்டா்னி ஜெனரல் அலுவலகம் தொகுப்பாக தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் தனியாக மனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை’ என்று கூறி, வழக்கு விசாரணையை 2023-ஆம் ஆண்டு ஜனவா் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com