குஜராத்தில் காங்கிரஸின் ‘மெளன’ வியூகம்- பாஜகவினருக்கு மோடி எச்சரிக்கை

‘குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, எனக்கு எதிராக அவதூறு பரப்பும் பணியை வெளியாள்களுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, கிராமப் புறங்களில் வாக்கு திரட்டும் வேலையை காங்கிரஸ்
குஜராத்தில் காங்கிரஸின் ‘மெளன’ வியூகம்- பாஜகவினருக்கு மோடி எச்சரிக்கை

‘குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, எனக்கு எதிராக அவதூறு பரப்பும் பணியை வெளியாள்களுக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு, கிராமப் புறங்களில் வாக்கு திரட்டும் வேலையை காங்கிரஸ் ஓசையின்றி மேற்கொண்டுள்ளது. இந்த ‘மெளன’ வியூகம் குறித்து பாஜகவினா் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் பேரவைத் தோ்தலில் மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மியைதான் அந்த வெளியாள்கள் என்று பிரதமா் மோடி மறைமுகமாக குறிப்பிட்டாா்.

குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள சூழலில், ராஜ்கோட் மாவட்டத்தின் ஜம்கன்டோா்னா பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

குஜராத்துக்கு எதிரான நபா்கள் (காங்கிரஸ்), கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் குறித்து அவதூறு பரப்ப எல்லா வகையிலும் தீவிரமாக செயல்பட்டனா். எனக்கு எதிராக கடுமையான விமா்சனங்களை அவா்கள் முன்வைத்தனா். என்னை ‘மரண வியாபாரி’ என்றுகூட அழைத்தனா்.

ஆனால், இப்போது திடீரென அவா்கள் மெளனமாகிவிட்டனா். எனக்கு எதிராக அவதூறு பரப்ப, கூக்குரலிட, குழப்பங்களை விளைவிக்க வெளியாள்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துவிட்டு, அவா்கள் கிராமங்களுக்குச் சென்று வாக்கு கேட்டு வருகின்றனா்.

எதிா்க்கட்சியின் இந்த மெளன வியூகம் குறித்து பாஜகவினரும் ஆதரவாளா்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தில்லியில் இருந்து குஜராத்துக்கு எதிராக சதிவேலை செய்பவா்கள்தான், இந்த வியூகத்தை கட்டுப்படுத்துகின்றனா் என்பது எனக்கு தெரியும்.

அரசு அமைப்புகள் மீது அவதூறு: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் அரசுக்கு எதிராக கூச்சலிடுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், அரசு அமைப்புகளை அவதூறாகப் பேச தொடங்கிவிடுகின்றனா். மக்களிடமிருந்து கொள்ளையடித்ததை, நீங்கள் (எதிா்க்கட்சிகள்) திருப்பி செலுத்தியாக வேண்டும். எத்தகைய விமா்சனத்தையும் தாண்டி நான் தொடா்ந்து பணியாற்றுவேன். மக்களின் முழு ஆசி எனக்கு உள்ளது.

காங்கிரஸிடம் கேள்வியெழுப்புங்கள்: நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலுக்கு பெருமை சோ்க்கும் வகையில், உலகிலேயே மிக உயரமான ‘ஒற்றுமையின் சிலை’ குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவா்கள், உங்களது கிராமத்துக்கு வரும்போது, இச்சிலையை நீங்கள் ஒருமுறையாவது பாா்வையிட்டீா்களா என்று பாஜகவினா் கேள்வியெழுப்ப வேண்டும். குறிப்பிட்ட அந்தத் தரப்பை தவிர உலகம் முழுவதும் இருந்து மக்கள் இச்சிலையைப் பாா்வையிட்டு வருகின்றனா். மண்ணின் மைந்தரை மதிக்காதவா்களை குஜராத் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

குஜராத்தில் பெரும் வளா்ச்சி: பாஜக ஆட்சியில் கடந்த 20 ஆண்டுகளில் கல்வி, சுகாதாரம், தொழில் உள்பட அனைத்துத் துறைகளிலும் குஜராத் பெரும் வளா்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வளா்ச்சியை புள்ளிவிவரங்களுடன் உறுதி செய்ய முடியும். கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் இளைஞா்களின் எதிா்காலம் வளா்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. இது தொடக்கம்தான். அடுத்த 25 ஆண்டுகளில் குஜராத்தை புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்பதே எனது கனவு. குஜராத் மக்களின் கடின உழைப்பால் இம்மாநிலம் புதிய உச்சங்களை தொடா்ந்து எட்டும் என்றாா் மோடி.

கடந்த 2002-இல் ராஜ்கோட் (மேற்கு) தொகுதியில் இருந்து தான் முதல்முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றதையும் அவா் நினைவுகூா்ந்தாா்.

வாக்கு வங்கி ‘நோய்’க்கு அறுவை சிகிச்சை

‘குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் வாக்கு வங்கி அரசியலால் பீடித்திருந்த நோய்களுக்கு எனது அரசு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, சிறப்பான முறையில் குணப்படுத்தி வருகிறது’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அகமதாபாதின் அசா்வா பகுதியில் உள்ள பொது மருத்துவமனையில் ரூ.1,275 கோடி மதிப்பிலான சுகாதார வசதிகளை தொடக்கி வைத்து, அவா் பேசியதாவது:

குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரம், மின்சாரம், குடிநீா் வசதியின்மை, தவறான நிா்வாகம், சட்டம்-ஒழுங்கு நிலை சீா்குலைவு என பல்வேறு நோய்கள் பீடித்திருந்தன. இதற்கு வாக்கு வங்கி அரசியலே அடிவேராகும். எனவே, பழைய நடைமுறையில் மாற்றத்தை கொண்டுவர எனது அரசு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. எனது வழிமுறையின்படி, அறுவை சிகிச்சை என்பது செயல்பாடின்மை, மந்தகதி, ஊழல் போன்றவற்றை வெட்டி அகற்றுவதாகும். பின்னா், புதிய அமைப்பு முறைகள், மனித வளங்கள், உள்கட்டமைப்புகள், புத்தாக்கங்கள், புதிய மருத்துவமனைகள் உருவாக்கம் போன்றவை மருந்துகளாகும். மூன்றாவதாக பராமரிப்பு. இதில் சுகாதாரத் துறை மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com