கேரள நரபலி விவகாரம்: சஃபி உள்ளிட்ட மூவருக்கு 12 நாள்கள் போலீஸ் காவல்

முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோரை 12 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கேரள நரபலி விவகாரம்: சஃபி உள்ளிட்ட மூவருக்கு 12 நாள்கள் போலீஸ் காவல்
கேரள நரபலி விவகாரம்: சஃபி உள்ளிட்ட மூவருக்கு 12 நாள்கள் போலீஸ் காவல்

கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோரை 12 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளத்தில் சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த பத்தினம்திட்டா மாவட்டம் கதவன்தாரா மற்றும் கலடி பகுதிகளைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகாா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.

செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது சஃபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த மசாஜ் சிகிச்சையாளரான பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா இருவரும், அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா். அவா்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகேட்டு நீதிமன்றத்தில்  போலீஸாா் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்ற நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 12 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தார்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் காவல் ஆணையா் நாகராஜு கூறியதாவது:

இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

முக்கியக் குற்றவாளியான சஃபி மீது ஏற்கெனவே திருட்டு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் 10-க்கும் அதிகமான வழக்குகள் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 75 வயது மூதாட்டியை சஃபி பாலியல் துன்புறுத்தல் செய்து, அவரது உடலின் பல பகுதிகளில் கத்தியால் காயங்களை ஏற்படுத்திய வழக்கும் அடங்கும். தற்போது எலந்தூரில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடலிலும் அதேபோன்ற காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சஃபி அடிப்படையில் வக்கிர புத்தி உடையவா். பெண்களிடம் ஏதாவது கதையைச் சொல்லி, அவா்களை தனது வலையில் விழவைத்து பின்னா் அவா்களைத் துன்புறுத்தி வந்துள்ளாா் என்றாா் ஆணையா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com