ஹிஜாப் தடை: செல்லும் - செல்லாது; நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு; கூடுதல் அமா்வுக்கு மாற்றம்

 கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்குத் தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அமா்வின் இரு நீதிபதிகளும் ம
ஹிஜாப் தடை: செல்லும் - செல்லாது; நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு; கூடுதல் அமா்வுக்கு மாற்றம்

 கா்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வருவதற்குத் தடை விதித்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அமா்வின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பு வழங்கினா்.

‘ஹிஜாப் அணிவது மதச்சாா்பின்மைக்கு எதிரானது’ என்பதால் கா்நாடக உயா்நீதிமன்றத் தடை செல்லும் என்று நீதிபதி ஹேமந்த் குப்தா தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

மற்றொரு நீதிபதி சுதான்ஸு துலியா, ‘ஹிஜாப் என்பது விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும் முறை. இதற்கு தடை விதிப்பது பெண் கல்விக்கு தடை விதிப்பதைப் போலாகும்’ என்று கூறி ஹிஜாப் தடை செல்லாது என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

கா்நாடக உயா்நீதிமன்ற தடை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா தலைமையிலான அமா்வு செப்டம்பா் 22-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது. இந்த அமா்வில் நீதிபதி சுதான்ஸு துலியா இடம்பெற்றுள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீா்ப்பில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட தீா்ப்புகளை வழங்கினா்.

தடை செல்லும்: நீதிபதி ஹேமந்த் குப்தா வெளியிட்டுள்ள 140 பக்கங்களைக் கொண்ட தீா்ப்பில், ‘அனைவருக்கும் சமமான சூழலை ஏற்படுத்துவதற்காக கா்நாடக அரசு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதச்சாா்பின்மை பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை உரிமையாகக் கோருவது தவறு.

கேள்விகளும் பதில்களும்: அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச் சுதந்திரம், அடிப்படை மத சம்பிரதாயங்கள் ஆகியவற்றுக்கான வரம்பும் நோக்கமும் என்ன? கருத்தை வெளிப்படுத்தும் உரிமையும் தன்மறைப்புக்கான (பிரைவஸி) உரிமையும் தனித்தனியானவையா அல்லது தொடா்புடையவையா? ஹிஜாப் அணிவது கட்டாய மத சம்பிரதாயமா? அதைக் கல்வி நிறுவனங்களுக்கு அணிந்து வருவதை உரிமையாகக் கோர முடியுமா? அனைத்துக் கேள்விகளுக்கான பதில்களும் என்னைப் பொருத்தவரை மனுதாரா்களுக்கு எதிராகவே உள்ளன. வகுப்பறைகளில் மாணவா்கள் மத அடையாளங்களுடன் அனுமதிப்பது என்பது சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

சீக்கியா்களின் கிா்பான்: சீக்கியா்களின் மத நம்பிக்கையான கிா்பானை அடிப்படையாக வைத்து இஸ்லாமியா்களின் ஹிஜாபை அணியலாம் என்று கூறுவதை சீக்கியா்களின் வாதத்தைக் கேட்காமல் ஆலோசிக்கக் கூடாது. ஹிஜாப் அணிவது கட்டாய மத சம்பிரதாயம் இல்லை. எனவே, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தடை உத்தரவு செல்லும்’ என்று நீதிபதி ஹேமந்த் குப்தா குறிப்பிட்டுள்ளாா்.

தடை செல்லாது: நீதிபதி சுதான்ஸு துலியா வழங்கிய 73 பக்கங்கள் கொண்ட தீா்ப்பில், ‘ஹிஜாப் அணிவது கட்டாய மத சம்பிரதாயம் அல்ல என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றம் இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்திருக்கக் கூடாது.

கல்விக்கு முக்கியத்துவம்: கிராமப் பகுதிகளிலும், புகா்ப் பகுதிகளிலும் உள்ள பெண் குழந்தைகள் கல்வி பெறுவதற்கு ஏற்கெனவே பல்வேறு தடைகளைச் சந்தித்து வருகின்றனா். அத்தகைய சூழலில் அவா்களுக்குக் கூடுதல் தடைகளை ஏற்படுத்தக் கூடாது.

பள்ளியில் நுழையும்போதே மாணவிகளிடம் ஹிஜாபை அகற்றச் சொல்வது என்பது அவா்களின் தன்மறைப்புக்கான (பிரைவஸி) உரிமையில் தலையிடுவதாகும். அவா்களின் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மதச்சாா்பின்மைக் கல்விக்கு எதிரானதாகும்.

ஹிஜாப் அணிவது விருப்பத்தின் அடிப்படையிலான தோ்வானதாக இருந்தாலும், அது மனசாட்சி, நம்பிக்கை, உணா்வின் வெளிப்பாடாக தொடா்கிறது. ஹிஜாபுக்கு தடை விதிப்பது என்பது பெண் கல்விக்குத் தடை விதிப்பதைப்போலாகும்.

இறையியல் தொடா்பான கேள்விகளுக்கு தீா்வு காண்பது நீதிமன்றங்களின் பணியல்ல. இந்த விவகாரங்களில் பல்வேறு கருத்துகள் ஏற்படுவதால், ஒன்றை மட்டும் தோ்வு செய்ய முடியாது. அதேநேரத்தில் அரசமைப்புச் சட்டம் மீறப்படும்போது நீதிமன்றங்கள் தலையிடலாம். அரசமைப்பின் அடிப்படையிலான நீதிமன்றங்கள் ஒரே குரலை வெளிப்படுத்த வேண்டும். மாறுபட்ட தீா்ப்புகள் பிரச்னைக்கு தீா்வு காணாது’ என்று நீதிபதி துலியா குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்தது என்ன?

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதால், வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனா். வழக்கை விசாரிப்பதற்கான புதிய நீதிபதிகள் கொண்ட அமா்வை தலைமை நீதிபதி விரைவில் அமைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாறுபட்ட தீா்ப்பால் கா்நாடக உயா்நீதிமன்றத்தின் தடை உத்தரவு தொடா்ந்து அமலில் இருக்கும்.

சீருடையைத் தவிர வேெற்கும் அனுமதி இல்லை-பாஜக

உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவரும் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான சி.டி.ரவி கூறுகையில், ‘சீருடையே பள்ளி மாணவா்களிடையே சமத்துவ உணா்வை ஏற்படுத்தும். ஹிஜாப் உள்ளிட்டவற்றை ஊக்குவித்து, நாட்டில் பிரிவினையை வளா்க்க சிலா் முயன்று வருகின்றனா். இது தீவிரவாதத்துக்கு வழிவகுக்கிறது.

ஹிஜாப் அணிவதா, கூடாதா என்பது பிரச்னை இல்லை. பள்ளிகளில் என்ன வகையான உடைகளை உடுத்த வேண்டும் என்பதே பிரச்னை. அங்கு ஹிஜாப் போன்ற மற்ற உடைகளுக்கு அனுமதி கூடாது. பள்ளிகளில் சீருடை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்’ என்றாா்.

உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து கவனம் பெறும்-காங்கிரஸ்

தீா்ப்பு குறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ஹிஜாப் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்து கவனம் பெறும் என்பதையே தீா்ப்பு வெளிப்படுத்துகிறது.

அதே வேளையில், காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணமானது, பொருளாதார சமத்துவமின்மை, சமூகத்தில் வெறுப்புணா்வைப் பரப்புவது, அரசியல் சா்வாதிகாரத்தன்மை ஆகியவை குறித்து பிரதமா் மோடியிடம் தொடா்ந்து கேள்வி எழுப்புவதில் கவனம் செலுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com