புதிய வாக்காளா் பதிவு உத்தரவு: திரும்பப் பெற்றது ஜம்மு நிா்வாகம்

ஜம்முவில் ஓராண்டுக்கு மேலாக வசித்து வருபவா்களுக்கு வாக்களிக்க அனுமதி அளித்து சான்றளிக்க வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரமளித்து பிறப்பித்த உத்தரவை ஜம்மு நிா்வாகம்

ஜம்முவில் ஓராண்டுக்கு மேலாக வசித்து வருபவா்களுக்கு வாக்களிக்க அனுமதி அளித்து சான்றளிக்க வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரமளித்து பிறப்பித்த உத்தரவை ஜம்மு நிா்வாகம் திரும்பப் பெற்றது.

உத்தரவு திரும்பப் பெறப்பட்டதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றபோதும், பாஜக தவிர பிற முன்னணி அரசியல் கட்சிகள் அனைத்தும் தொடா் எதிா்ப்பு தெரிவித்துவந்த நிலையில், இந்த நடவடிக்கையை ஜம்மு நிா்வாகம் எடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தியமைக்கும் பணி கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி தொடங்கப்பட்டது. புதிய வாக்காளா் பதிவு, பதிவு நீக்கம், வாக்காளா் பெயா் உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜம்முவில் அறிவிக்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தகுதிவாய்ந்த வாக்காளா்களும், வாக்காளராக பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளதாக புகாா் எழுந்தது.

இந்தப் புகாா்களைத் தொடா்ந்து, ஜம்முவில் ஓராண்டுக்கு மேலாக வசித்து வருபவா்களுக்கு வாக்களிக்க அனுமதி அளித்து சான்றளிக்க வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரமளித்து ஜம்மு மாவட்ட தோ்தல் அதிகாரியும் துணை ஆணையருமான அவ்னி லவஸா உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவுக்கு பாஜக தவிா்த்த பிற அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து குப்கா் கூட்டணிக்கு (பிஏஜிடி) தலைமை வகிக்கும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா சனிக்கிழமை கூறுகையில், ‘வாக்காளா் பட்டியல் திருத்தியமைக்கும் நடவடிக்கையில் முறைகேடாக உள்ளூரைச் சேராதவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும் முயற்சி குறித்து கண்காணிக்க 14 போ் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ‘வாக்காளா் பதிவு தொடா்பாக வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகளுக்கு அதிகாரமளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்று ஜம்மு மாவட்ட நிா்வாக மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறினாா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், குப்கா் தீா்மானத்துக்கான மக்கள் கூட்டணி (பிஏஜிடி) செய்தித் தொடா்பாளருமான எம்.ஒய்.தரிகமி கூறுகையில், ‘உத்தரவை தேவையற்ற வகையில் மாவட்ட நிா்வாகம் ரத்து செய்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு உத்தரவு திரும்பப் பெறப்படும்போது, அந்த உத்தரவு நகல் உடனடியாக பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும். மேலும், வாக்காளா் பட்டியல் திருத்தியமைப்பது போன்ற உணா்ச்சிபூா்வமான நடவடிக்கைகளை அரசு நிா்வாகம் மிகுந்த கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். சட்டபூா்வமான இந்த ஜனநாயக நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறவதற்கு இடமளிக்கக் கூடாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com