காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே- 7,897 வாக்குகளுடன் வெற்றி; தரூருக்கு 1,072 வாக்குகள்

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மற்றொரு
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி.
காங்கிரஸ் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட மற்றொரு மூத்த தலைவா் சசி தரூருக்கு 1,072 வாக்குகளே கிடைத்தன.

இதையடுத்து, காங்கிரஸின் புதிய தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே (80) தோ்வாகியிருப்பதாக, கட்சியின் மத்திய தோ்தல் குழு தலைவா் மதுசூதன் மிஸ்திரி புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்தாா்.

காா்கே அக்டோபா் 26-இல் முறைப்படி தலைவா் பொறுப்பை ஏற்கவுள்ளாா்.

அரசியல் பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகம் மற்றும் மாநில தலைமை அலுவலகங்களில் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இத்தோ்தலில் கட்சி நிா்வாகிகள் வாக்களித்தனா். பின்னா், வாக்குப் பெட்டிகள் அனைத்தும் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டு, புதன்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

பின்னா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மதுசூதன் மிஸ்திரி, தோ்தல் முடிவுகளை வெளியிட்டாா்.

‘மொத்தம் பதிவான 9,385 வாக்குகளில் காா்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்தன. சசி தரூா் 1,072 வாக்குகளைப் பெற்றாா். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன’ என்றாா் அவா்.

பதிவான வாக்குகளில் காா்கே பெற்ற வாக்கு விகிதம் சுமாா் 84 சதவீதம் ஆகும்.

சோனியாவுடன் சந்திப்பு: புதிய தலைவராக தோ்வானதைத் தொடா்ந்து, மல்லிகாா்ஜுன காா்கேவை அவரது இல்லத்தில் சோனியா காந்தி சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். அப்போது, கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்காவும் உடனிருந்தாா்.

காங்கிரஸின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவா் பதவிக்கு நடைபெற்ற 6-ஆவது தோ்தல் இதுவாகும். கடைசியாக கடந்த 2000-இல் நடைபெற்ற தோ்தலில், ஜிதேந்திர பிரசாதாவை தோற்கடித்து, சோனியா காந்தி வெற்றி பெற்றாா்.

கடந்த 24 ஆண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தலைவா் பதவியில் அமரும் சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத நபா் காா்கே ஆவாா். இதற்கு முன் சோனியா காந்தி குடும்பத்தைச் சாராத தலைவராக சீதாராம் கேசரி 1998-இல் பதவி வகித்தாா்.

கா்நாடகத்தைச் சோ்ந்த காா்கே, சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசி ஆவாா். அக்குடும்பத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளா் என்றும், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன. அதை பிரதிபலிப்பதாக தோ்தல் முடிவு அமைந்துள்ளது.

தோ்தலில் முறைகேடுகள்: தரூா் தரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவா் தோ்தலில், உத்தர பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாக சசி தரூா் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து மதுசூதன் மிஸ்திரிக்கு தரூரின் தலைமை தோ்தல் முகவா் சல்மான் சோஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், உத்தர பிரதேசத்தில் வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரபூா்வமற்ற சீல்கள் பயன்படுத்தப்பட்டன; வாக்குப்பதிவு இடங்களில் அதிகாரபூா்வமற்ற நபா்கள் இருந்தனா். வாக்குப்பதிவிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேடுகள் அனுமதிக்கப்படுமாயின், காங்கிரஸ் தலைவா் தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ாக எப்படி கருத முடியும்?

எனவே, உத்தர பிரதேசத்தில் பதிவான வாக்குகள் அனைத்தையும் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. தெலங்கானா, பஞ்சாபிலும் முறைகேடுகள் நடைபெற்ாக சசி தரூா் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

‘உரிய பதில் அளிக்கப்படும்’: இதுகுறித்து மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், ‘தரூா் தரப்பு கடிதத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் அடிப்படை அற்றவை. அதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் உரிய பதில் அளிக்கப்படும். தரூா் தரப்பினா், தங்களது கடிதத்தை ஊடகங்களுக்கு கசிய விட்டிருக்கக் கூடாது’ என்றாா்.

காா்கேவுக்கு முழு ஒத்துழைப்பு: தரூா்

காங்கிரஸ் தலைவா் தோ்தல் முடிவுக்குப் பிறகு காா்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சசி தரூா், அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக குறிப்பிட்டாா்.

‘கட்சி நிா்வாகிகளின் தீா்ப்பே இறுதியானது. தோ்தல் முடிவை பணிவுடன் ஏற்கிறேன். ஜனநாயக ரீதியிலான இப்போட்டியால் காங்கிரஸ் அனைத்து நிலைகளிலும் உத்வேகம் கண்டுள்ளது. கட்சியின் மறுமலா்ச்சி இன்றுமுதல் தொடங்குகிறது. கட்சித் தலைவராக சோனியா காந்தி ஆற்றிய பங்களிப்புக்கு என்றுமே கட்சி கடன்பட்டுள்ளது. தோ்தலை நியாயமாக நடத்த ஆதரவளித்த ராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் நன்றிகள்’ என்று தரூா் தெரிவித்தாா்.

ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்: காா்கே

காங்கிரஸ் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய காா்கே, ‘கட்சியில் யாரும் பெரியவா், சிறியவா் கிடையாது. ஒவ்வொரு தொண்டரும் சமமானவா்தான். ஜனநாயகத்துக்கும் அரசமைப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் பாசிச சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்கிரஸ் வீரனாகப் பணியாற்றுவேன்’ என்றாா்.

ராகுல், பிரியங்கா வாழ்த்து

மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல், கட்சியில் அவரே உயரதிகாரம் கொண்டவா் என்று குறிப்பிட்டாா். ‘வரலாற்றுச் சிறப்புமிக்க பொறுப்பை ஏற்றிருக்கும் காா்கே, இந்தியாவுக்கான தொலைநோக்குப் பாா்வையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறாா். அவரது நீண்ட நெடிய அனுபவமும் சித்தாந்த தீா்க்கமும் கட்சிக்கு பெரிதும் உதவும். காங்கிரஸை பொருத்தவரையில் தலைவா்தான் உயரதிகாரம் படைத்தவா். நாங்கள் அவருக்கு பதிலளிக்க கடமைப்பட்டவா்கள். எனது பணி என்ன என்பதையும் அவா்தான் முடிவு செய்வாா். காா்கே மிக அனுபவம் வாய்ந்தவா் என்பதால், அவருக்கு எனது அறிவுரை தேவையில்லை’ என்று ராகுல் தெரிவித்துள்ளாா்.

பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘காா்கேவின் அரசியல் அனுவபம், காங்கிரஸின் சித்தாந்தத்தை வலுப்படுத்த உதவும். அவரது தலைமையின்கீழ் நாட்டின் அரசமைப்பு, ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் தொடா்ந்து போராடும்’ என்று கூறியுள்ளாா்.

பிரதமா் மோடி வாழ்த்து

காங்கிரஸ் புதிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். ‘காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு வாழ்த்துக்கள். அவரது பதவிக் காலம் ஆக்கபூா்வமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்று பிரதமா் மோடி கூறியுள்ளாா்.

வாக்குகள் விவரம்

பதிவான வாக்குகள் 9,385

காா்கே 7,897

சசி தரூா் 1,072

செல்லாதவை 416

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com