

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடந்த 28 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூடுதல் முதன்மை செயலர் அடல் துல்லோ தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக 2 நாட்கள் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து கூடுதல் முதன்மை செயலர் அடல் துல்லோ கூறியதாவது: உலகில் உள்ள 80 சதவிகித ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் வருமானம் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரும் பருவநிலை மாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 28 ஆண்டுகளில் ஜம்முவின் வெப்பநிலை 2.32 டிகிரி செல்சியஸ் மற்றும் காஷ்மீரின் வெப்பநிலை 1.45 டிகிரி செல்சியஸ் ஆகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் காஷ்மீரில் பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக மழை பருவம் தவறிப் பெய்வதால் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால், ஜம்முவில் நெல் பயிர்களும், காஷ்மீரில் ஆப்பிள் சாகுபடியும் பெரிய அளவிலான நஷ்டத்தினை சந்திக்க நேரிடுகிறது. விவசாயிகள் மாறி வரும் பருவநிலை குறித்து தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு விவசாய முறைகளை கடைபிடித்தால் பெரிய அளவிலான பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கலாம். உலகப் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பலவும் தங்களது பொருளாதாரத்திற்கு விவசாயத்தினை நம்பி இருக்கின்றன. ஆனால், மாறி வரும் பருவநிலை மாற்றம் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.