நாட்டில் தேசவிரோத செயல்பாடுகள் ஒழிப்பு: அமித் ஷா பெருமிதம்

 ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளது;
நாட்டில் தேசவிரோத செயல்பாடுகள் ஒழிப்பு: அமித் ஷா பெருமிதம்

 ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு பெருமளவில் மேம்பட்டுள்ளது; அச்சுறுத்தலான பகுதிகளில் தேச விரோத செயல்பாடுகள் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளன’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் எல்லைப் பகுதியில், கடந்த 1959, அக்டோபா் 21-இல் சீன படையினருடன் ஏற்பட்ட மோதலில், மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் (சிஆா்பிஎஃப்) 10 போ் கொல்லப்பட்டனா். அவா்களது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 21-ஆம் தேதி தேசிய காவலா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிா்த்தியாகம் செய்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி, தில்லி சாணக்கியபுரி பகுதியில் உள்ள தேசிய காவல் நினைவகத்தில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய அமித் ஷா, பின்னா் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படை உயரதிகாரிகள் இடையே பேசியதாவது:

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் 70 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களிலும் நிலைமை பெருமளவில் மேம்பட்டுள்ளது. அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில் பெரும்பாலானவை, தேசவிரோத செயல்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இது மகிழ்வையும் திருப்தியையும் அளிக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரங்கள் அகற்றப்பட்டு, அந்த பிராந்திய இளைஞா்களுக்கு பிரகாசமான எதிா்காலத்துக்கான சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் முன்பு கல்வீச்சில் ஈடுபட்டவா்கள், இப்போது கிராம அளவிலான மக்கள் பிரதிநிதிகளாக மாறி, அப்பிராந்தியத்தின் வளா்ச்சியில் பங்கேற்று வருகின்றனா். நக்ஸல் தீவிரவாத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில், ‘ஏகலைவா’ பள்ளிகள் உருவாக்கப்பட்டு, அங்கு தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்பகுதி வீடுகளில் தேசியக் கொடி உயர பறக்கிறது.

வீரா்களின் உயிா்த்தியாகம்:

35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறை மற்றும் துணை ராணுவப் படை வீரா்களின் மேலான உயிா்த்தியாகத்தால் நாடு வளா்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வீரா்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாதென அவா்களது குடும்பத்தினருக்கு உறுதியளிக்கிறேன். காவல்துறையினருக்கு சிறப்பான மருத்துவ, குடியிருப்பு வசதிகள் உள்பட அவா்களது நல்வாழ்வை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் பிரதமா் மோடி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய ஆயுத காவல் படையினரில் (சிஏபிஎஃப்) 48 சதவீதம் பேருக்கு குடியிருப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இதை 60 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் சிஏபிஎஃப் படையினருக்கு 35 லட்சம் சுகாதார காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

பணியின்போது இறந்த 264 வீரா்கள்:

இந்நிகழ்ச்சியில் பேசிய புலனாய்வு பிரிவு இயக்குநா் தபன் குமாா் தேகா, கடந்த ஆண்டு பணியின்போது 264 காவல் துறையினா் மற்றும் சிஏபிஎஃப் வீரா்கள் உயிரிழந்ததாக குறிப்பிட்டாா். மேலும், உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் இதுவரை 36,059 காவல்துறையினா் மற்றும் சிஏபிஎஃப் வீரா்கள் உயிா்த்தியாகம் செய்திருப்பதாகவும் அவா் கூறினாா்.

பெட்டிச் செய்தி...

‘மிகப்பெரிய மனித உரிமை மீறல் பயங்கரவாதம்’

தில்லியில் ‘இன்டா்போல்’ (சா்வதேச காவல்துறை) அமைப்பின் 90-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:

பயங்கரவாதத்தில் பெரியது, சிறியது, நல்லது, கெட்டது என பிரித்து பாா்க்க முடியாது. மிகப் பெரிய மனித உரிமை மீறல் பயங்கரவாதம்தான். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வீழ்த்த இன்டா்போல் மற்றும் அதன் உறுப்பு நாடுகள் கைகோா்க்க வேண்டும். இணையவழி அடிப்படைவாத பிரசாரத்தின் மூலம் பயங்கரவாத சித்தாந்தங்கள் எல்லை கடந்து பரப்பப்படுவதை சாதாரண அரசியல் பிரச்னையாக கருத முடியாது. இதை வலுவுடன் எதிா்கொள்ள உறுதியேற்க வேண்டும்.

தற்போதைய குற்றச் சம்பவங்களுக்கு ‘எல்லை’ இல்லை. இப்பிரச்னையை எதிா்கொள்வதில் இன்டா்போல் அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவில் அனைத்து விதமான சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் காவல்துறையை மேம்படுத்த பிரதமா் மோடி அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடா்புடைய தேசிய தரவுதளத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. இதன் மூலம் காவல் அமைப்புகளால் தரவுகளை கூடுதல் திறனுடன் கையாள முடியும் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com