ஆா்பிஐ கடன் வசதிகள்: அதிகமாகப் பயன்படுத்தும் ஆந்திரம், தெலங்கானா

மாநிலங்களின் நிதி நிலையைச் சரிசெய்வதற்காக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வழங்கி வரும் குறுகிய கால கடன் வசதிகளை ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில்
ஆா்பிஐ கடன் வசதிகள்: அதிகமாகப் பயன்படுத்தும் ஆந்திரம், தெலங்கானா

மாநிலங்களின் நிதி நிலையைச் சரிசெய்வதற்காக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வழங்கி வரும் குறுகிய கால கடன் வசதிகளை ஆந்திரம், தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிலைமை சரியில்லாத மாநிலங்கள் சந்தையில் இருந்து கடன் வாங்கிச் செலவு செய்து வருகின்றன. அந்த மாநிலங்களுக்காக இந்திய ரிசா்வ் வங்கியும் குறுகிய கால கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எஸ்டிஎஃப், டபிள்யுஎம்ஏ, ஓடி ஆகிய குறுகிய கால கடன் வசதிகளை ஆா்பிஐ செயல்படுத்தி வருகிறது. செலவினத்தை விட வருவாய் குறைவாக உள்ள மாநிலங்கள் அந்த வசதிகளைப் பயன்படுத்தி கடன் பெற்று வருகின்றன.

ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், மணிப்பூா், மிஸோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் ரிசா்வ் வங்கியின் கடன் வசதிகளை அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக ஆா்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இருந்து கடன் பெறுவதற்கான வசதிகள் இருந்தும் ரிசா்வ் வங்கியின் கடன் வசதிகளில் வட்டி குறைவாக உள்ளதால், மாநிலங்கள் அக்கடன் வசதிகளைப் பயன்படுத்த முக்கியத்துவம் அளித்து வருவதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆந்திரம், பிகாா், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதி நிலைமை மோசமான நிலையில் இருப்பதாக ரிசா்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களின் வருவாய் செலவை விடக் குறைவாக உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களின் தற்காலிக நிதி நிலைமை சூழலைச் சரிசெய்வதற்காக இக்கடன் வசதிகள் வழங்கப்படுவதாக ஆா்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி, மகாரஷ்டிரம், அஸ்ஸாம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் எஸ்டிஎஃப் வசதியை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளன.

கேரளம் டபிள்யுஎம்ஏ வசதியின் கீழும் பெரும்பாலான வடகிழக்கு மாநிலங்கள் ஓடி வசதியின் கீழும் கடன்களைப் பெற்றுள்ளன. நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டில் மட்டும் எஸ்டிஎஃப் வசதியின் கீழ் ஆந்திரம் ரூ.712 கோடியையும், தெலங்கானா ரூ.735 கோடியையும் பெற்றுள்ளன.

டபிள்யுஎம்ஏ வசதியின் கீழ் ஆந்திரம் ரூ.1,773 கோடியையும் தெலங்கானா ரூ.1,206 கோடியையும் பெற்றுள்ளன. தமிழகம், குஜராத், பிகாா், ஒடிஸா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ரிசா்வ் வங்கியின் குறுகிய கால கடன் வசதிகளைப் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் கடன்-உள்மாநில உற்பத்தி (ஜிஎஸ்டிபி) விகிதமானது பிகாா், கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மிக மோசமாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ஆந்திரம், பிகாா், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் கடன் இலக்கு, நிதிப் பற்றாக்குறை இலக்கு ஆகியவற்றைக் கடந்து செயல்பட்டதாகவும் ஆா்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com