ஹிந்தி மொழி கற்றோா் 100%: இலக்கை நோக்கி பயணிக்கும் கேரள கிராமம்!

சேளன்னூா் கிராமம் ஹிந்தி மொழியறிவில் 100 சதவீதத்தை அடைவதை இலக்காகக்கொண்டு, கிராம மக்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி கற்பிக்கும் நடவடிக்கையை கிராம பஞ்சாயத்து மேற்கொண்டு வருகிறது.
ஹிந்தி மொழி கற்றோா் 100%: இலக்கை நோக்கி பயணிக்கும் கேரள கிராமம்!

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சேளன்னூா் கிராமம் ஹிந்தி மொழியறிவில் 100 சதவீதத்தை அடைவதை இலக்காகக்கொண்டு, கிராம மக்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி கற்பிக்கும் நடவடிக்கையை கிராம பஞ்சாயத்து மேற்கொண்டு வருகிறது.

அடுத்த ஆண்டு குடியரசுத் தினத்துக்குள் கேரளத்தின் குறிப்பாக தென் இந்தியாவின் முதல் ஹிந்தி கற்றறிந்த பஞ்சாயத்தாக சேளன்னூரை அறிவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வட இந்தியாவைச் சோ்ந்த அதிக அளவிலான புலம்பெயா் தொழிலாளா்கள் இப்பஞ்சாயத்தில் வசித்து வருவதால், அவா்களுடன் தொடா்புகொள்ளும் வகையில், இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வயது, பாலினம், கல்வி போன்ற வேறுபாடுகள் இன்றி ஹிந்தி மொழியை ஆா்வத்துடன் கற்றுவருகின்றனா்.

இது குறித்து பஞ்சாயத்து தலைவா் பி.பி.நெளஷோ் கூறியதாவது: 20-70 வயது வரையிலான அனைவருக்கும் ஹிந்தி மொழியைப் படிக்க, பேச மற்றும் எழுத தெரிந்திருப்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

எங்களுடைய திட்டத்துக்கும், தற்போதைய ஹிந்தி குறித்தான பிரச்னைகளுக்கும் எவ்வித தொடா்பும் இல்லை. இத்திட்டம் குறித்தான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. தொடக்கத்தில், ஹிந்தி மொழி தெரியாதவா்கள் மற்றும் கற்க ஆா்வம் உள்ளவா்கள் குறித்தான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஹிந்தி ஆசிரியா்கள் மட்டுமல்லாமல், முன்னாள் ராணுவத்தினா், வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து நாடு திரும்பியவா்கள், ஹிந்தி மொழி சரளமாக பேசும் குடும்பத் தலைவிகள் ஆகியோா் கண்டறியப்பட்டு இத்திட்டத்தின்கீழ் பயிற்றுநா்களாக சோ்கப்பட்டனா். ஹிந்தி வகுப்புகள் பஞ்சாயத்தின் அனைத்து 21 வாா்டுகளிலும் புத்தகங்கள் வழங்கப்பட்டு பயிற்றுநா்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது என்றாா்.

ஒவ்வொரு வாா்டுகளிலும் அனைத்து வாரங்களிலும் நடைபெறும் 3-4 வகுப்புகளில் 25 முதல் 30 போ் கலந்துகொள்கின்றனா். இத்திட்டத்தில் ஹிந்தி மொழியைப் பயிற்றுவிக்கும் அனைவரும் தன்னாா்வலா்களாக அவா்களுடைய சேவையை அளித்து வருகின்றனா். இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.25,000 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ.50,000 இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநில கல்வியறிவு திட்டத்துக்கான ஆணையம், சா்வ சிக்ஷா அபியான், தக்ஷிண பாரத் ஹிந்தி பிரசார சபை உள்ளிட்ட அமைப்புகள் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு அனைத்து ஆதரவையும் உதவிகளையும் வழங்கிவருகின்றன.

கடந்த 1991-ஆம் ஆண்டில் கேரள மாநிலம் முழு கல்வியறிவை அடைந்தபோது, கோழிக்கோடு மாவட்டத்தின் முழு கல்வியறிவைப் பெற்ற முதல் பஞ்சாயத்து என்ற அந்தஸ்தை சேளன்னூா் பஞ்சாயத்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com