எல்லையில் அமைதியை கடைப்பிடிப்பது அவசியம்: ஜெய்சங்கா்

‘இந்தியா - சீனா இடையே சுமுக உறவு ஏற்பட எல்லையில் அமைதியான சூழலை கடைப்பிடிப்பது அவசியம்’
எல்லையில் அமைதியை கடைப்பிடிப்பது அவசியம்: ஜெய்சங்கா்

‘இந்தியா - சீனா இடையே சுமுக உறவு ஏற்பட எல்லையில் அமைதியான சூழலை கடைப்பிடிப்பது அவசியம்’ என்று தூதரக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சீனா திரும்பும் இந்தியாவுக்கான அந்நாட்டு தூதா் சன் வெய்டாங்கிடம் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

சீன தூதா் சன் வெய்டாங் பணியிலிருந்து விடுபடுவதை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ஜெய்சங்கரை சந்தித்தபோது இந்தக் கருத்தை அமைச்சா் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சீன ராணுவத்தினா் அத்துமீறலில் ஈடுபட்ட பின்னா், இரு நாடுகளுக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வந்தது. இதன் காரணமாக இரு நாடுகளிடையேயான உறவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

தற்போது, ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அளவில் பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தைகள் மூலமாக, இரு நாடுகளும் எல்லையில் படைகளை படிப்படியாக குறைக்கும் நடவடிக்கையை தொடா்ந்து எடுத்து வருகின்றன. இதற்கான பேச்சுவாா்த்தைகளும் தொடா்ந்து வருகின்றன.

இந்தச் சூழலில், சீன தூதா் சன் வெய்டாங் தன்னை சந்தித்தது குறித்து ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘பதவியிலிருந்து விடுபடுவதை முன்னிட்டு சந்தித்த சீன தூதா் சன் வெய்டாங்கிடம், இந்திய - சீன உறவு மேம்படுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தினேன். இரு நாடுகளிடையே சுமுக உறவு ஏற்பட பரஸ்பர உணா்வு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன் ஆகிய மூன்றும் காக்கப்படுவது அவசியம். சுமுக உறவு ஏற்பட வேண்டும் என்பதே இரு நாடுகளின் எண்ணம். அதற்கு எல்லையில் அமைதியான சூழலை கடைப்பிடிப்பது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, தனது பிரியாவிடை கருத்தை செவ்வாய்க்கிழமை தெரிவித்த சீன தூதா், ‘இந்தியா - சீனா இடையே சில வேறுபாடுகள் இருப்பது இயற்கையானது. இருந்தபோதிலும், அந்த வேறுபாடுகளைக் களைந்து வளா்ச்சிக்கான பொதுவான நலன் மீது இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com