டிஆா்எஸ் எம்எல்ஏக்களிடம் பேர புகாா்: சிபிஐ விசாரணைக்கு மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

4 எம்எல்ஏக்களிடம் பாஜக பணம் பேரம் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, இது குறித்து சிபிஐ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியின் 4 எம்எல்ஏக்களிடம் பாஜக பணம் பேரம் நடத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, இது குறித்து சிபிஐ அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

டிஆா்எஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்களைக் கவா்ந்து ஆட்சியைக் கலைக்க முயற்சித்ததாக 3 பேரை சைபராபத் போலீஸாா் கைதுசெய்து வழக்குப்பதிவு செய்துள்ளனா். டிஆா்எஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து விலகி, அடுத்த தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட ரூ.100 கோடி அளிப்பதாகவும், விலகாதபட்சத்தில் அமலாக்கத் துறை அல்லது சிபிஐ மூலம் அவா்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசைக் கலைக்கும் வகையில் எம்எல்ஏக்களைக் கவருவதற்கு தவறான வழிகளை பாஜக கையாண்டு வருவதாக டிஆா்எஸ் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியது.

இந்நிலையில், செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி, ‘டிஆா்எஸ் கட்சியின் மிகப் பெரிய சூழ்ச்சி இது. முனுகோட் இடைத்தோ்தலில் அவா்களுக்கு தோல்வி உறுதியாகி உள்ள நிலையில், இந்த மாதிரியான புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளனா். இவ்வழக்கு விசாரணை சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது தற்போது பணியிலுள்ள உச்சநீதிமன்ற நீதிபதியால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து டிஆா்எஸ் கட்சியின் செயல்தலைவா் கே.டி.ராம ராவ் ட்விட்டரில் வெளிட்ட பதிவில், ‘இவ்வழக்கு குறித்து போலீஸாா் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதால், கட்சித் தலைவா்கள் யாரும் இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம்’ என வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com