சட்டம் - ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு: பிரதமர் மோடி பேச்சு

சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்றும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை
சட்டம் - ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு: பிரதமர் மோடி பேச்சு

சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு என்றும், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள், காவல்துறை டிஜிபிக்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சிந்தனை அமா்வு மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. ‘வரும் 2047-இல் இந்தியாவை வளா்ந்த நாடாக உருவாக்க வேண்டும்’ என்ற பிரதமா் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிந்தனை அமா்வு கூட்டத்துக்கு அமித் ஷா தலைமை வகித்தாா். 

சிந்தனை அமா்வு கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் அமா்வில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வழியில் உரையாற்றினார். 

அப்போது, அரசியலமைப்பு சட்டத்தின் படி, சட்டம் ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பாக இருந்தாலும், அவை நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் சமமான அளவில் தொடர்புடையவை. நாடு முன்னேறும்போது வளர்ச்சிப் பலன்கள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். 

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைக் காலங்களின்போது அமைதியான சூழல் நிலவ பாடுபட்ட சட்டம் ஒழுங்கு பணியாளர்களுக்கு பாராட்டுகள். நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை. 

உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதன் முயற்சியே சிந்தனை முகாம். 

சட்டம் ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல, அதனையும் தாண்டியதாக மாறிவிட்டது. 

"ஒவ்வொரு மாநிலமும்  பிற மாநிலத்திடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், ஒவ்வொருவரிடமிருந்தும் உத்வேகத்தைப் பெற வேண்டும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும், இதுதான் அரசியலமைப்பின் உணர்வு என்பதுடன், நாட்டு மக்கள் மீது நமக்குள்ள பொறுப்பும் ஆகும்." 

குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே மாறி வருகிறது. தொழில்நுட்பத்தால், குற்றவாளிகள் இப்போது மாநிலங்களில் குற்றங்களைச் செய்ய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

குற்றங்கள் உள்ளூர் அளவில் நடப்பதாக இனி கருதப்பட மாட்டாது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச  அளவிலான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதனால்தான், மாநில முகமைகளுக்கிடையேயும், மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கிடையிலும் பரஸ்பர ஒத்துழைப்பும் முக்கியமானதாகும்.

எல்லை தாண்டிய குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இணையவெளி குற்றங்கள் அல்லது ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், அச்சுறுத்தலைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அரசு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். 

கடந்த சில ஆண்டுகளில், அனைத்து மாநில அரசுகளும் பயங்கரவாதத்தை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயல்பட்டன... நமது படைகளை ஒன்றிணைத்து அதைக் கையாள வேண்டும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நாம் தோற்கடிக்க வேண்டும். அது துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் அல்லது பேனாவை ஏந்தியிருந்தாலும், அனைத்திற்கும் நாம் தீர்வு காண வேண்டும்" என்று பிரதமர் கூறினார். 

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்.

காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நாட்டில் சட்டம், ஒழுங்கு வலுப்படுத்தவும், பல்வேறு மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும்.  

நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே சீருடை எனும் யோசனை சாத்தியமா என்பதை மாநிலங்கள் ஆலோசிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து ஒரே காவலர் சீருடையை உருவாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு  கேட்டுக் கொண்ட பிரதமர், இது, காவலருக்கான பொதுவான அடையாளத்தை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்பை எற்படுத்தும். சட்ட அமலாக்கப் பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும், இதன் மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். அதே நேரம் மாநிலங்கள் தங்கள் எண் அல்லது சின்னங்களைக் கொண்டிருக்கலாம். "ஒரே நாடு, ஒரே காவல்துறை சீருடை" என்பதை உங்கள் கவனத்திற்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்." 

மாநிலங்கள் ஒன்றிணைந்து கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படலாம். இதனால் ஒருவருக்கொருவர் உத்வேகம் பெறலாம். இது அரசியலமைப்பின் உணர்வு மற்றும் நமது குடிமக்களுக்கான நமது கடமை என்றார்.

"சட்டத்தை மதிக்கும் குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக, எதிர்மறை சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது நமது பொறுப்பு என்றும், ஒரு சிறிய போலிச் செய்தி நாடு முழுவதும் புயலை கிளப்பும் வல்லமை கொண்டது... எந்தவொரு தகவலையும் மக்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அதை பகுப்பாய்வு செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும், நம்புவதற்கு முன்பு  சிந்திப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுச் செல்ல வேண்டும்."

“ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு அமைப்பு நம்பகமானதாக இருப்பது மிகவும் அவசியமாகும். மக்களிடம் இதன் நம்பகத்தன்மையும், அணுகுமுறையும் மிகவும் முக்கியமாகும்." 

இயற்கை பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும்  மாநில தேசிய மீட்புப் படையின் வளர்ச்சி குறித்து பேசிய மோடி, குற்றம் நடந்த இடத்திற்கு காவல்துறையின் வருகை அரசின் வருகையாக கருதப்படுகிறது.

மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில், காவல்துறைக்கு கிடைத்த நற்பெயர் ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்றும், காவல்துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, தேவைப்படுபவர்களுக்கு உதவினார்கள். அவர்கள் கடமையில் குறைவில்லை. எளிதில் அணுகக் கூடியதாகவும், அர்ப்பணிப்பு உள்ளதாகவும் காவல் துறை திகழ்கிறது என்ற கருத்து மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

இந்த விஷயத்தில் அவர்களை ஊக்குவிப்பது, வழிநடத்துவது அதற்கான திட்டமிடல் ஆகியவை நமது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார்.

அடுத்த 25 ஆண்டுகள் 'அமிர்த பீதி' உருவாக்கப்படும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல், அனைத்து காலனித்துவ மனநிலையிலிருந்தும் விடுதலை, பாரம்பரியத்தின் பெருமை, ஒற்றுமை மற்றும் மிக முக்கியமாக, குடிமகன் கடமை ஆகிய 'ஐந்து உறுதிமொழிகள்' தீர்மானங்களை உள்வாங்குவதன் மூலம் இந்த 'அமிர்த பீதி' உருவாக்கப்படும். அவை நல்லாட்சிக்கு வழிகாட்டும் சக்தியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

5ஜி தொழில்நுட்ப யுகத்தில் நுழைந்துள்ள நாம் விழிப்புணர்வுடன் செயல்படுவது முக்கியமானது. 5ஜி பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அது நமக்கு ஒரு வரமாகவும், சாபமாகவும் இருக்கலாம். குற்றங்களை தடுப்பதற்கு மட்டுமல்ல, குற்ற விசாரணைக்கும் உதவுகிறது. எனவே, நாம் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 5ஜி மூலம், தொழில்நுட்பத்தில் உலகை விட நாம் பத்து படிகள் முன்னேற்றம் காண வேண்டும்.

பல்வேறு மாநிலங்களின் பல்வேறு தொழில்நுட்பங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருப்பதில்லை என்பதால், ஒரு பொதுவான தளத்தின் அவசியம் குறித்து வலியுறுத்திய மோடி, "நாம் நாடு தழுவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும், நமது சிறந்த நடைமுறைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாகவும், இயங்கக்கூடியதாகவும் உள்ள ஒரு பொதுவான இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும்," என்று பிரதமர் மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com