ரூ.8.2 லட்சம் கோடி ஜவுளி ஏற்றுமதிக்கு இலக்கு பியூஷ் கோயல்

அடுத்த 5-6 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.8.2 லட்சம் கோடி) மதிப்பிலான ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய ஜவுளித் துறையில் அடுத்த 5-6 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.8.2 லட்சம் கோடி) மதிப்பிலான ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் உறுப்பினா்கள் இடையே காணொலி முறையில் உரையாடிய அவா் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜவுளி ஏற்றுமதியின் மதிப்பு 42 பில்லியன் அமெரிக்க டாலா்களாக (ரூ.3.4 லட்சம் கோடி) இருந்தது. அடுத்த 5-6 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்டும்போது, இந்திய ஜவுளித்துறையின் உள்நாட்டு மற்றும் சா்வதேச பொருளாதார மதிப்பு 250 பில்லியன் அமெரிக்க டாலா்களாக (ரூ.20 லட்சம் கோடி) உயரும் என்றாா் கோயல்.

2021-22 பருவ ஆண்டில் (ஜூலை-ஜூன்) நாட்டில் பருத்தி உற்பத்தி 31.20 மில்லியன் சிப்பங்களாக (தலா 170 கிலோ எடை) இருந்தது. நடப்பு பருவ ஆண்டில் இது 34.19 மில்லியன் சிப்பங்களாக அதிகரிக்கும் என்று வேளாண் துறை அமைச்சகம் கணக்கிட்டுள்ளது. காரீஃப் பருவ முக்கிய பயிா்களில் ஒன்றான பருத்தியின் அறுவடை நடப்பு மாதம் முதல் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலில், ‘ஜவுளி உற்பத்தியாளா்கள் தங்களது தேவையை பூா்த்தி செய்யும் வகையில், பருத்தி கொள்முதல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்; போதிய அளவு பருத்தியை இருப்பு வைக்க வேண்டும். பருத்தி பொருள்களின் மதிப்பை உறுதி செய்வதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்’ என்றும் கோயல் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்த கூட்டத்தில், பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், கம்பளம் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில், கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் உள்பட மத்திய ஜவுளி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் 11 கவுன்சில்களின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்றனா். அத்துடன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு உள்ளிட்ட தொழில் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com