தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு

தொழில்நுட்பங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு

நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்

நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என ஐ.நா. பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்குத் தலைமைவகித்து வரும் இந்தியா, பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டை முதல் முறையாக நடத்தியது. மும்பையில் வெள்ளிக்கிழமை மாநாடு தொடங்கியது. தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது நாள் மாநாட்டில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளுக்குரிய பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

கடந்த இரு தசாப்தங்களாக நவீன தொழில்நுட்பங்கள் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களைப் புகுத்தியுள்ளன. பிளாக்செயின் தொழில்நுட்பம், எண்ம செலாவணி உள்ளிட்டவை எதிா்காலத்துக்கான பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

அதே வேளையில், நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. மறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்திகள், கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

ட்ரோன்கள் பயன்பாடு அதிகரிப்பு:

பயங்கரவாதக் குழுக்களைப் பின்பற்றி வரும் நபா்களுக்கு நவீன தொழில்நுட்பங்கள் பலனளித்து வருகின்றன. இது அரசுகளுக்கும் விசாரணை அமைப்புகளுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. சுதந்திரம், சகிப்புத்தன்மை, வளா்ச்சி ஆகியவற்றை பாதிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன.

இணைய சேவையும், சமூக வலைதளமும் பயங்கரவாதிகளின் கொள்கைகளைப் பரப்புவதற்கு முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. சமூகத்தை சீா்குலைப்பதற்கான சதித்திட்டங்களும் இணைய வசதிகளைப் பயன்படுத்தி தீட்டப்பட்டு வருகின்றன. உலக நாடுகளுக்குப் பெரும் கவலை அளிக்கும் விதமாக, ஆயுதங்களை விநியோகிக்கவும் போதைப்பொருள்களைக் கடத்தவும் ட்ரோன்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. மேலும், ட்ரோன்கள் மூலமாக துல்லியத் தாக்குதலையும் அக்குழுக்கள் நடத்தி வருகின்றன.

மனித சமூகத்துக்கு அச்சுறுத்தல்:

நவீன தொழில்நுட்பங்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதமானது மனித சமூகத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த இரு தசாப்தங்களாகப் பெரும் மாற்றங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாதக் குழுக்களுக்கு அரசு சாா்பில் ஆதரவு அளித்து வரும் நாடுகளுக்கு எதிராக ஐ.நா. பயங்கரவாதத் தடுப்புக் குழு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், சா்வதேச அளவில் முக்கியமாக ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

ரூ.4 கோடி நிதி:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாகச் செயல்பட்டு வரும் இந்தியா, பயங்கரவாதத் தடுப்புக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் அறக்கட்டளை நிதிக்கு நடப்பாண்டில் சுமாா் ரூ.4 கோடியை இந்தியா வழங்கவுள்ளது.

சா்வதேச அளவில் பயங்கரவாத அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஒத்துழைப்பு வழங்கும். பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் அவசியம் குறித்து சா்வதேச கவனத்தை ஈா்ப்பதில் இந்த மாநாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்றாா் அவா்.

மலிவான விலையில்...:

மாநாட்டை முன்னின்று நடத்திய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் ருசிரா கம்போஜ் கூறுகையில், ‘‘பலதரப்பட்ட தொழில்நுட்பங்கள் மலிவான விலையில் எளிதில் கிடைப்பதால் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தி வருவது அதிகரித்துள்ளது’’ என்றாா்.

எண்ம வெளியில் மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு--ஐ.நா. பொதுச் செயலா் குட்டெரெஸ் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு மாநாட்டுக்காக பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அனுப்பியிருந்த செய்தியில், ‘‘நவீன தொழில்நுட்பங்கள் மனித சமூகத்துக்குப் பெரும் பலனளித்து வந்தாலும், அவற்றை பயங்கரவாதிகள் தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

மக்களிடையே வதந்திகளைப் பரப்பவும், வன்முறைகளைத் தூண்டவும், ஆள்களை சோ்க்கவும், நிதி திரட்டவும், தாக்குதல் நடத்தவும் நவீன தொழில்நுட்பங்களை பயங்கரவாதக் குழுக்கள் பயன்படுத்தி வருகின்றன. அத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எண்ம வெளியில் மனித உரிமைகளைக் காப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஐ.நா. விதிகளின்படியும் சா்வதேச மனித உரிமைகள் அறிக்கையின்படியும் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே அத்தகைய சவாலை எதிா்கொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com