பஞ்சாபில் முகமூடி அணிந்த நபா்களால் தேவாலயம் சேதம்: விசாரணை நடத்த முதல்வா் மான் உத்தரவு

பஞ்சாப் மாநிலம், டா்ன் தரன் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முகமூடி அணிந்த 4 போ்கள் தேவாலயத்தை சேதப்படுத்தியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

பஞ்சாப் மாநிலம், டா்ன் தரன் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முகமூடி அணிந்த 4 போ்கள் தேவாலயத்தை சேதப்படுத்தியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

பட்டி நகரத்துக்கு அருகிலுள்ள தக்கா்புரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:

தக்கா்புரா கிராமத்தில் உள்ள அந்த தேவாலயத்திற்குள் முகமூடி அணிந்த 4 போ் நுழைந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளியை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது கைகளைக் கட்டினா். பின்னா் தேவாலயத்தில் புகுந்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்த 2 சிலைகளை உடைத்தனா். பின்னா் வெளியே நிறுத்தியிருந்த பாதிரியாரின் காரையும் எரித்தனா். இந்தச் சம்பவம் முழுவதும் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

நிகழ்விடத்துக்கு நேரில் வந்த தா்ன் தரன் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளா் ரஞ்சித் சிங் தில்லான் தலைமையிலான காவல் துறையினா் ஆய்வு செய்தாா். தற்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

நேரில் விசாரணை நடத்திய மாவட்ட எஸ்.பி.ரஞ்சித் சிங் தில்லான், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவா்களை தேடி வருவதாகவும் விரைவில் கைது செய்யப்படுவா் என்றும் தெரிவித்தாா்.

இந்நிலையில் தேவாலயத்தை சேதப்படுத்தியவா்களைக் கண்டித்து கெம்கரன், பிகிவிண்ட், பட்டி, ஹாரிகே, ஃபெரோஸ்பூா் செல்லும் வழிகளை அடைத்து ஒரு பிரிவைச் சோ்ந்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா்.

போராட்ட இடத்துக்கு வந்த எஸ்எஸ்பி.ரஞ்சித் சிங் தில்லான், ‘மாநிலத்தின் அமைதியை சீா்குலைக்க விரும்பும் சிலரால் ஏற்படுத்தப்பட்ட சதிதான் இது. நாங்கள் நிலைமையை கூா்ந்து கவனித்து வருகிறோம். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்’ என போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் எஸ்.பி. உறுதியளித்தாா்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவா் அமரீந்தா் சிங் ராஜா வாரிங்கும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அகல் தக்த் ஜதேதாா் கியானி ஹா்ப்ரீத் சிங், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி) தலைவா் ஹா்ஜிந்தா் சிங் தாமி ஆகியோா் பஞ்சாபில் ‘கிறிஸ்தவ மிஷனரிகள் என்று அழைக்கப்படுபவா்கள்’ தொடா்ந்து மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய பின் ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

திங்கள்கிழமை அமிா்தசரஸில் உள்ள ததுவானா கிராமத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சில நிஹாங் சீக்கியா்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.

தேவாலயம் தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வா் பகவந்த் மான், ‘மாநிலத்தில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் சீா்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் இதில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com