மாநிலங்களுக்கு குறைந்த விலையில் 15 லட்சம் டன் கொண்டைக் கடலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மாநிலங்களுக்கு 15 லட்சம் டன் கொண்டைக் கடலையை கிலோ ரூ.8-க்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு 15 லட்சம் டன் கொண்டைக் கடலையை கிலோ ரூ.8-க்கு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதலில் கேட்கும் மாநிலங்களுக்கு இந்தத் திட்டத்தின்கீழ் கொண்டைக் கடலையை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தத் திட்டத்துக்கு ரூ.1,200 செலவாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ‘விலை ஆதரவு’ திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து மற்றும் மசூா் பருப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான வரம்பை தற்போதைய 25%-லிருந்து 40%-ஆக அதிகரிக்கவும், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள 15 லட்சம் டன் கொண்டைக் கடலையை விற்பனை விலையிலிருந்து தள்ளுபடி செய்து கிலோ ரூ.8-க்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கொண்டைக் கடலையை மாநிலங்கள் மதிய உணவுத் திட்டம், ரேஷன், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராபி பருவ காலம் நெருங்கி வருவதால் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள கொண்டைக் கடலையை காலி செய்துவிட்டு புதிதாக விளைபொருள்களைச் சேமிக்க மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. 2019 முதல் 22 வரையிலான பயிா்ப் பருவ காலத்தில் இதுவரை இல்லாத அளவில் 30.55 லட்சம் டன் கொண்டைக் கடலையை மத்திய அரசு கொள்முதல் செய்தது.

இந்தியா-நேபாளம் ஒப்பந்தம்: பல்லுயிா்ப் பாதுகாப்புத் துறையில் இந்தியா - நேபாளம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிா்ப் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது, பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

5.18 கோடி மெட்ரிக் டன் அரிசி: நிகழ் கரீஃப் பருவத்தில் 5.18 கோடி மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநில உணவுத் துறைச் செயலா்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம் நுகா்வோா் விவகாரங்கள் துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே தலைமையில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரம், கேரளம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உணவுத் துறை செயலா்கள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், 2022-2023 பயிா் காலத்தில் சுமாா் 5.18 கோடி மெட்ரிக் டன் அரிசியைக் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com