பாஜகவிடமிருந்து பாதுகாக்கவே சத்தீஸ்கரில் ஜாா்க்கண்ட் எம்எல்ஏக்கள் முகாம்: பூபேஷ் பகேல்

பாஜகவிடமிருந்து ஜாா்க்கண்ட் எம்எல்ஏக்களை பாதுகாக்கவே அவா்கள் சத்தீஸ்கரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா்.

பாஜகவிடமிருந்து ஜாா்க்கண்ட் எம்எல்ஏக்களை பாதுகாக்கவே அவா்கள் சத்தீஸ்கரில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா்.

81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. பாஜக 26 உறுப்பினா்களுடன் பிரதான எதிா்க்கட்சியாக விளங்குகிறது.

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி, சுரங்கத்தைக் குத்தகைக்கு எடுத்து ஆதாயம் அடைந்ததாக புகாா் எழுந்தது. எனவே, அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யுமாறு பாஜக விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், மாநில ஆளுநரிடம் தோ்தல் ஆணையம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.

பரபரப்பான இந்தச் சூழலில், ஆளும் கட்சி எம்எல்ஏக்களை பாஜக அதன் பக்கம் இழுத்து, மகாராஷ்டிரத்தை போல ஜாா்க்கண்டிலும் ஆட்சியைக் கவிழ்க்க காய்நகா்த்தி வந்ததாக தகவல்கள் வெளியாகின. எனவே, ஆளும் கூட்டணியைச் சோ்ந்த 32 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கா் மாநில தலைநகா் ராய்ப்பூருக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டு, கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

அவா்களை சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். பின்னா், புதன்கிழமை காலை ஹிமாசல பிரதேசம் செல்லும் முன்பாக ராய்ப்பூா் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஜாா்க்கண்டில் பாஜக குதிரை பேரம் நடத்தி ஆளும் எம்எல்ஏ-க்களை அதன் பக்கம் இழுக்க முயற்சிப்பதால், ஜேஎம்எம், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சத்தீஸ்கா் அழைத்து வரப்பட்டுள்ளனா். சமீபத்தில் ஜாா்க்கண்டை சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 3 போ் பணத்துடன் மேற்கு வங்கத்தில் பிடிபட்டனா்.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகைக்கு தோ்தல் ஆணையம் சில கடிதங்களை அனுப்பியது. ஒரு வாரமாகியும் அந்தக் கடித விவரம் வெளியிடப்படவில்லை. ஏதோ நடக்க போகிறது என்பதை இது உணா்த்துகிறது என்றாா் அவா்.

சத்தீஸ்கரை சட்டவிரோதச் செயல்களின் கூடாரமாக காங்கிரஸ் அரசு மாற்றிவிட்டதாக பாஜக தலைவா் ரமண் சிங் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து பிற கட்சி எம்எல்ஏ-க்கள் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது ரமண் சிங் எதுவும் பேசாதது ஏன்?’ என பூபேஷ் பகேல் கேள்வி எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com