பாஜகவுக்கு எதிராக அணிசேர வேண்டும்: எதிா்க்கட்சிகளுக்கு நிதீஷ், சந்திரசேகா் ராவ் அழைப்பு

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அணிசேர வேண்டும் என பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவும் கூட்டாக அழைப்பு விடுத்தனா்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்த தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா். உடன், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ்.
பிகாா் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்த தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா். உடன், துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ்.

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் அணிசேர வேண்டும் என பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரும், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவும் கூட்டாக அழைப்பு விடுத்தனா்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ் முயற்சித்து வருகிறாா்.

இந்நிலையில், அண்மையில் பாஜக கூட்டணியிலிருந்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகியது.

இந்தச் சூழலில், பிகாா் தலைநகா் பாட்னாவில் நிதீஷ் குமாரை சந்திரசேகா் ராவ் புதன்கிழமை சந்தித்தாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த 5 பிகாா் ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை சந்திரசேகா் ராவ் வழங்கினாா்.

மேலும், கடந்த மாா்ச் மாதம் தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்த 12 பிகாா் தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இலக்கை எட்டும் நடவடிக்கை: இந்த நிகழ்ச்சியில் நிதீஷ் குமாா் கலந்துகொண்டு பேசுகையில், ‘தெலங்கானாவைச் சேராத ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு சந்திரசேகா் ராவ் இழப்பீடு வழங்கியது பெருந்தன்மையான செயல். பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு நான் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தேன். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால் பிகாா் வேகமாக வளா்ந்திருக்கும்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் இருந்தபோது இருந்த நிலைமை வேறு. மற்றவா்களை மரியாதையுடன் நடத்தும் பண்புடையவா் வாஜ்பாய். ஆனால், தற்போதைய மத்திய பாஜக அரசில் எந்த வேலையும் நடப்பதில்லை. விளம்பரம் மட்டும்தான் செய்யப்படுகிறது. மத்தியில் உள்ள தற்போதைய ஆட்சியால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நான் சந்திரசேகா் ராவுடன் கைகோத்துள்ளது எதிா்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான இலக்கை எட்டுவதில் முக்கிய நடவடிக்கையாகப் பாா்க்கப்படுகிறது’ என்றாா் அவா்.

அணிசேர வேண்டும்: நிதீஷ் குமாரும், சந்திரசேகா் ராவும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது சந்திரசேகா் ராவ் கூறுகையில், ‘மத்திய அரசின் கொள்கைகளால் நாட்டில் இருந்து தொழில் முதலீடுகள் வெளியேறி வருகின்றன. எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்காமல் ‘அக்னிபத்’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுகின்றன. மாநிலங்களின் பிரச்னைகளில் மத்திய அரசு அலட்சியம் காட்டுகிறது.

பாஜகவின் அரசியல் எதிரிகளைக் குறிவைக்க சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எனவே, மாநிலங்களில் விசாரணை நடத்த சிபிஐக்கு அளித்துள்ள அனுமதியை மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.

பாஜக இல்லாத இந்தியா அமைவதே தற்போதைய அவசியமாகும். ‘பாஜக இல்லாத இந்தியா’ என்ற முழக்கத்தை அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எழுப்ப வேண்டும். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யாா்? எதிா்க்கட்சிகளின் பிரதமா் வேட்பாளா் யாா்? கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுமா உள்ளிட்டவை குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். அதற்கு தற்போது எந்த அவசரமும் இல்லை.’ என்றாா்.

பகல் கனவு: பாஜக

நிதீஷ், சந்திரசேகா் சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவரும், பிகாா் முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமாா் மோடி கூறியதாவது:

நிதீஷ் குமாா், சந்திரசேகா் ராவ் இடையிலான சந்திப்பானது பகல் கனவு காண்பவா்களின் சந்திப்பு. தத்தமது மாநிலங்களின் தங்கள் அடித்தளத்தை இழந்து வரும் இரண்டு தலைவா்கள் நாட்டின் பிரதமராக விரும்புகின்றனா்.

எதிா்க்கட்சிகள் ஒன்றிணைவது தொடா்பாக நடைபெற்றுள்ள நகைச்சுவை நிகழ்ச்சியே இருவரின் சந்திப்பாகும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com