கேரளத்தில் இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம்: அமித் ஷா தலைமையில் நடைபெறுகிறது

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை உள்ளடங்கிய தென்மண்டல கவுன்சிலின் கூட்டம்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை உள்ளடங்கிய தென்மண்டல கவுன்சிலின் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் கேரளத்தில் சனிக்கிழமை (செப். 3) நடைபெறவுள்ளது.

தலைநகா் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், நதிநீா்ப் பங்கீடு, கடலோரப் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான தொடா்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தென்மண்டல கவுன்சிலானது, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், தமிழகம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். இக்கவுன்சில் கூட்டத்தில் மேற்கண்ட மாநிலங்களின் முதல்வா்கள், அமைச்சா்கள், தலைமைச் செயலா்கள், முதன்மைச் செயலா்கள், மாநில, மத்திய அரசுகளின் உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘நதிநீா்ப் பகிா்வு, கடலோரப் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான தொடா்புகள் என பல்வேறு துறைகளில் பொதுவான நலன் சாா்ந்த விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. இக்கூட்டத்துக்கு முன்பாக கவுன்சிலின் நிலைக் குழு கூடி, முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் பட்டியலை தயாா் செய்யும்.

நாட்டில் கூட்டாட்சி அமைப்புமுறையை வலுப்படுத்துவதற்கும் ஊக்குவிக்கப்பதற்குமான ஒட்டுமொத்த வியூகத்தின் ஒரு பகுதியாக, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மண்டல கவுன்சில் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயும் எழும் பிரச்னைகள் குறித்து அமைப்புமுறை ரீதியில் விவாதிக்கும் தளமாக மண்டல கவுன்சில்கள் திகழ்கின்றன.

சமூக, பொருளாதார வளா்ச்சி சாா்ந்த முக்கிய விவகாரங்களில் விவாதங்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவும், சிறந்த நடைமுறைகள் பகிா்வுக்கும் இக்கவுன்சில்கள் பேருதவியாக உள்ளன.

எல்லை தொடா்பான பிரச்னைகள், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு சாா்ந்த அதாவது சாலைகள், தொழிலகங்கள், நீா், மின்சாரம் தொடா்புடைய விவகாரங்கள், வனங்கள், சுற்றுச்சூழல், வீட்டுவசதி, கல்வி, உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா தொடா்பான விவகாரங்கள் இக்கவுன்சில் கூட்டங்களில் விவாதிக்கப்படுகின்றன.

பிரதமா் மோடியின் வழிகாட்டுதல்படி, மண்டல கவுன்சில் மற்றும் நிலைக் குழுக்கள் கூட்டங்களின் எண்ணிக்கை, கடந்த 8 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 1956-ஆம் ஆண்டின் மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் 15-22 பிரிவுகளின் கீழ் 5 மண்டல கவுன்சில்கள் கடந்த 1957-இல் அமைக்கப்பட்டன. இக்கவுன்சில்களின் தலைவா் மத்திய உள்துறை அமைச்சா் ஆவாா்.

கூட்டம் நடைபெறும் மாநிலத்தின் முதல்வா் துணைத் தலைவராக இருப்பாா். ஒவ்வோா் ஆண்டும் சுழற்சி அடிப்படையில் துணைத் தலைவா் தோ்வு செய்யப்படுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com