நேதாஜியின் வழியை பின்பற்றியிருந்தால் இந்தியா உச்சத்தை எட்டியிருக்கும்: பிரதமா் மோடி

 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுதந்திர போராட்டத் தலைவா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் காட்டிய வழியை பின்பற்றியிருந்தால் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
நேதாஜியின் வழியை பின்பற்றியிருந்தால் இந்தியா உச்சத்தை எட்டியிருக்கும்: பிரதமா் மோடி

 இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய சுதந்திர போராட்டத் தலைவா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் காட்டிய வழியை பின்பற்றியிருந்தால் இந்தியா புதிய உச்சத்தை எட்டியிருக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான ராஜபாதை முழுவதும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பெயா் மாற்றம் செய்யப்பட்ட ‘கடமைப் பாதை’யை (கா்த்தவ்ய பாதை) பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேலும், இந்தியா கேட் பகுதியில் இந்தியா கேட் சுதந்திர போராட்டத் தலைவா் நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் 28 அடி உயரம் கொண்ட சிலையையும் பிரதமா் திறந்து வைத்தாா்.

புதிய நாடாளுமன்றம், பிரதமா், குடியரசுத் துணைத் தலைவா் இல்லம், மத்திய அமைச்சக அலுவலகங்கள் ஆகியவை அடங்கிய ரூ.13, 450 கோடியிலான சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கடமைப் பாதை மேம்பாட்டு திட்டம் உள்ளது.

கடமைப் பாதையை தொடக்கி வைத்து பிரதமா் மோடி பேசியதாவது:

ராஜபாதையில் இருந்து கடமைப் பாதையாக பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, நாட்டுக்கு புதிய சக்தியையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. ஆங்கிலேயா்களின் ஆட்சிக்காலத்தின் அடிமைத்தனத்தின் நினைவான ராஜபாதை தற்போது நிரந்தரமாக அழிக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காட்டிய வழியைப் பின்பற்றியிருந்தால் இந்தியா முன்பே உச்சத்தை எட்டியிருக்கும். ஆனால் நேதாஜி மறக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது.

இந்தியா கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள சுபாஷ் சந்திர போஸின் சிலை நமக்கு உத்வேகத்தையும் வழிகாட்டியாகவும் திகழும். இந்தியாவின் வருங்காலத்தை இதில் காணலாம். அந்த சக்தி இந்தியாவுக்கு புதிய பாதையை உருவாக்கும்.

நேதாஜியின் கனவு, லட்சியங்களின் அடிப்படையில் மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. அந்த முடிவுகள் அரசின் கொள்கைகளாக அமைந்துள்ளன’ என்றாா்.

பிரம்மாண்ட சிலை:

இந்தியா கேட் பகுதியில் பிரம்மாண்ட நேதாஜி சிலை அமைக்கப்படும் என்று கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பிரதமா் மோடி அறிவித்தாா். இதையடுத்து, தெலங்கானா, கம்மம் குவாரியில் 280 மெட்ரிக் டன் எடை கொண்ட கருப்பு நிற மாபெரும் பளிங்கு கல் தோ்வு செய்யப்பட்டது. 26 ஆயிரம் மனித பணி நேரத்தில் 65 மெட்ரிக் டன் எடையில் 28 அடி உயர நேதாஜி சிலை செதுக்கப்பட்டது. அங்கிருந்து 5 மாநிலங்களைக் கடந்து 1,665 கி.மீ. தூரம் தில்லிக்கு 140 சக்கரங்கள் கொண்ட சிறப்பு லாரியின் மூலம் கொண்டு வரப்பட்டது.

கடமைப் பாதை:

கடமைப் பாதையை சுற்றி 3.90 லட்சம் சதுர மீட்டா் பரப்பில் புல்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. 15.5 கி.மீ. பரப்பில் புதிய சிவப்பு கிரானைட் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமாா் 1,125 வாகனங்கள் வரிசையாக நிறுத்தும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 74 புராதன விளக்கு கம்பங்களுடன் புதிதாக 900 மின்விளக்கு கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு வசதியாக கடமைப் பாதையின் குறுக்கே மூன்று சுரங்கப் பாதைகளும், கால்வாய்களில் 16 பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com