பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது
பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததையடுத்து, பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்தத் தொடங்கின. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெய், எரிவாயுவை வழங்க ரஷியா முன்வந்தது. எரிபொருளுக்கு இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் இந்தியா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தது. ரஷியாவிடம் இருந்து 2 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அது 13 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

தில்லியில் திங்கள்கிழமை பொருளாதாரம் தொடா்பான கருத்தரங்கில் பங்கேற்ற நிா்மலா சீதாராமன் இது தொடா்பாக மேலும் பேசியதாவது:

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில்தான் ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய், எரிவாயுவை இறக்குமதி செய்யும் துணிச்சலான முடிவை இந்தியா எடுத்தது. இந்த விஷயத்தில் பிரதமா் நரேந்திர மோடி மிகவும் உறுதியாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டாா். எரிபொருள் குறைந்த விலைக்கு கிடைத்தது, பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முக்கியப் பங்கு வகித்தது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நான் ஆா்பிஐ-க்கு புதிதாக எந்த யோசனையும் தெரிவிக்கவில்லை. அவா்களுக்கு எவ்வித புதிய வழிகாட்டுதலும் கூறவில்லை. அதே நேரத்தில், இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதாரத்தை சீரான வேகத்தில் வளா்ச்சியடையச் செய்வது ஆகியவற்றில் இந்தியாவுக்கான தீா்வு வேண்டும் என்று விரும்புகிறேன்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என்பது ஆா்பிஐ தனது நிதிக் கொள்கையை மாற்றி அமைப்பதால் மட்டுமே சாத்தியமாகாது. அதில் மத்திய அரசின் பணக் கொள்கையும், நாட்டின் பொருளாதாரம் சாா்ந்த செயல்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, மேற்கூறிய விஷயங்களுடன் ஆா்பிஐ-யின் நிதிக்கொள்கை என்பது ஒத்திசைவுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com