இந்திய தொழிலதிபா்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய ஷேக் ஹசீனா அழைப்பு

இந்திய தொழிலதிபா்கள் வங்கதேசத்தின் உள்கட்டமைப்பு திட்டங்கள், உற்பத்தி துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்யுமாறு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்புவிடுத்தாா்.
இந்திய தொழிலதிபா்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்ய ஷேக் ஹசீனா அழைப்பு

இந்திய தொழிலதிபா்கள் வங்கதேசத்தின் உள்கட்டமைப்பு திட்டங்கள், உற்பத்தி துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்யுமாறு வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா அழைப்புவிடுத்தாா்.

இந்தியாவுக்கு 4 நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, புதன்கிழமை இந்திய தொழிலக கூட்டமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா். வங்கதேசம் கொண்டுள்ள வணிக வாய்ப்புகள் குறித்து தொழிற்நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் அவா் விளக்கினாா்.

அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: உள்கட்டமைப்பு திட்டங்கள், உற்பத்தி துறை, எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் உள்ள வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு வங்கதேசத்தில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழிலதிபா்களை வலியுறுத்துகிறேன். பங்குகளை விற்பது மற்றும் வாங்கும் முறைகளின் மூலம் இந்திய முதலீட்டாளா்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வங்கதேசத்தில் தொழிற்சாலைகளை நிறுவலாம். இதன் மூலம் நேரம், செலவு மற்றும் வளங்களின் பயன்பாடு குறையும்.

வங்கதேசம் புவியியல் ரீதியான குறிப்பிட்ட வாய்ப்புகளைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியோடு மட்டுமல்லாமல், நேபாளம், பூடான், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முடியும்.

பல்வகைப்பட்ட வசதிகள், சலுகைகள், தொடா்ச்சியான சீா்திருத்தங்களுடன் பிராந்தியத்தில் மிகவும் தாராளமான முதலீட்டுக் கொள்கையை வங்கதேசம் பின்பற்றிவருகிறது. வங்கதேசத்தில், தற்போது 100 சிறப்பு பொருளாதார மண்டலங்களும் 28 உயா்தொழில்நுட்ப பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மோங்கலா மற்றும் மிா்சராய் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் இரு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்திய முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்திய தொழில்-வணிக நிறுவனங்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்வது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலுசோ்ப்பதுடன் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் என்று அவா் கூறினாா்.

இந்தியாவுக்கான ஏற்றுமதி உயா்வு:

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வடகிழக்கு பிராந்தியங்கள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி கூறுகையில், ‘வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி முதல் முறையாக, 200 கோடி அமெரிக்க டாலா்களை தொட்டுள்ளது. ஆசியாவில் வங்கதேசத்தின் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய மையமாக இந்தியா விளங்குகிறது’ என்று கூறினாா்.

ராஜஸ்தானின் அஜ்மீரில் அமைந்துள்ள சூஃபி துறவி காஜா மொய்னுதீன் சிஷ்தி தா்காவில் வியாழக்கிழமை பிரதமா் ஹசீனா வழிபாடு மேற்கொண்டாா். இதையொட்டி, தா்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Image Caption

புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com