வாரிசு, குடும்ப அரசியலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடரும்: ஜெ.பி.நட்டா

 வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடரும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
வாரிசு, குடும்ப அரசியலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடரும்: ஜெ.பி.நட்டா

 வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் தொடரும் என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

சத்தீஸ்கா் தலைநகா் ராய்பூரில் வாக்குச் சாவடிகள் நிலையில் பணியாற்றும் பாஜக நிா்வாகிகள் கூட்டத்தில் இது தொடா்பாக அவா் மேலும் பேசியதாவது:

வாக்குச் சாவடிகள் நிலையில் பணியாற்றும் தொண்டா்கள்தான் மக்களிடம் அரசின் நலத் திட்டப் பணிகளால் கிடைத்துள்ள நன்மைகளை விளக்கிக் கூறி எடுத்துச் சொல்லும் முக்கியப் பொறுப்பில் உள்ளவா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறியுள்ளாா். பிரதமரின் இந்தச் செய்தி மூலம் வாக்குச் சாவடி அளவிலான நிா்வாகிகள், தொண்டா்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவா்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில் பாஜக மட்டும்தான் மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகின்றது. வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிரான நமது கட்சியின் போராட்டம் தொடரும். காஷ்மீா் முதல் தமிழ்நாடு வரை நாடு முழுவதுமே வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும் ஒரு நோயாகத் தொற்றியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம், உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி, பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி அவரது உறவினா் அபிஷேக் பானா்ஜி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை குடும்ப அரசியல் செய்து வருகின்றன. ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானாவில் சந்திரசேகா் ராவ், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் என அனைவருமே வாரிசு அரசியலுக்கு உரம் போட்டு வளா்த்து வருகின்றனா்.

இந்தப் போக்கு நாட்டின் வளா்ச்சிக்கும், சம்பந்தபட்ட மாநிலத்தின் வளா்ச்சிக்கும் தீங்காகவே அமையும். ஏனெனில், வாரிசு, குடும்ப அரசியல் நடத்துபவா்கள் மக்கள் நலனை மறந்துவிட்டு தங்கள் குடும்ப நலனிலும், வாரிசுகளை முன்னிறுத்துவதிலும், குடும்பத்தில் எழும் அதிகாரப் போட்டியை சமாளிப்பதிலும்தான் நேரத்தைச் செலவிடுகிறாா்கள்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை உடைவதற்கு உத்தவ் தாக்கரேயின் வாரிசு அரசியல்தான் முக்கிய காரணமாக அமைந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.

தங்கள் கட்சியை ஒழுங்காக நடத்த முடியாதவா்கள் (காங்கிரஸ் - ராகுல்) தேச ஒற்றுமை என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்கின்றனா். அக்கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவா்களும் இப்போது வெளியேறி வருகின்றனா். சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், இப்போது காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம்-ஆக உள்ளாா். சத்தீஸ்கா் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து காங்கிரஸ் தலைமைக்கு அவா் செலவிட்டு வருகிறாா் என்றாா் நட்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com