
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் நகரின் சக்கர்தாரா பகுதியில் இந்த விபத்து நடைபெற்றது. கார் ஓட்டுநர் கணேஷ் ஆதவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஆதவ் காரை அதிவேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது மேம்பாலத்தில் எதிரே வந்த மூன்று இருசக்கர வானத்தின் மீது கார் மோதியது என்று சக்கர்தாரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
படிக்க: கைகொடுக்குமா ராகுல் காந்தியின் நடைப்பயணம்?
இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தனர்.
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் வினோத் கபேகர் (45), அவரது தாயார் லக்ஷ்மி பாய் (65), அவரது 5 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகன்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும், மேலும் இருவர் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.