அரிசி உற்பத்தி 60-70 லட்சம் டன் சரிய வாய்ப்பு: மத்திய உணவுத் துறை

நாட்டில் இந்த ஆண்டு காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 முதல் 70 லட்சம் டன் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.
அரிசி உற்பத்தி 60-70 லட்சம் டன் சரிய வாய்ப்பு: மத்திய உணவுத் துறை
Published on
Updated on
1 min read

நாட்டில் இந்த ஆண்டு காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 முதல் 70 லட்சம் டன் குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய உணவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தற்போதைய காரீஃப் பருவத்தில் நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 லட்சம் முதல் 70 லட்சம் டன் குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வேளாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, சில மாநிலங்களில் போதிய அளவில் மழை பெய்யாததால், நடப்பு காரீஃப் பருவத்தில் நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 393.79 லட்சம் ஹெக்டராகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 414.31 லட்சம் ஹெக்டோ்களாக இருந்தது.

நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை: தில்லியில் மத்திய உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், நாட்டில் நொய் அரிசி ஏற்றுமதி வெறும் 51,000 டன்னாக இருந்தது. இது கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 15.8 லட்சமாக அதிகரித்த நிலையில், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் அது 21.3 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது. இதன் மூலம் நொய் அரிசி ஏற்றுமதி கிட்டத்தட்ட 42 மடங்கு அதிகரித்துள்ளது. இது முற்றிலும் வழக்கத்துக்கு மாறானது. இதனால் விலங்குகளுக்கு உணவு அளிக்கவும், எத்தனால் கலப்புக்கும்கூட போதிய அளவில் நொய் அரிசி கிடைக்கவில்லை. அத்துடன் ஏற்றுமதி அதிகரித்ததால், உள்நாட்டில் நொய் அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. எனவே நொய் அரிசி ஏற்றுமதிக்கான மத்திய அரசின் தடை செப்டம்பா் 9-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுமட்டுமின்றி புழுங்கல் அரிசியை தவிர பாஸ்மதி அல்லாத இதர அரசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது அவற்றின் ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அந்த அரிசிகளின் விலை குறைய உதவும் என்று தெரிவித்தாா்.

ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் அளிக்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அதனை மத்திய அரசு நீட்டிக்குமா என்று சுதான்ஷுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதிலளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com